‘அரண்மனை 4’ – விமர்சனம்!

‘பென்ஸ் மீடியா’, ‘அவ்னி சினிமேக்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள படம், அரண்மனை 4. இயக்குநர் சுந்தர் சி, எழுதி, இயக்கி நடித்திருக்கிறார். அவருடன் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகிபாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, சேஷூ, டெல்லி கணேஷ் ராமசந்திர ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘அரண்மனை’ தலைப்பினில், சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 3 படங்களுமே குறிப்பிட்ட வெற்றியை பெற்றது. அந்த வரிசையில் 4 வதாக வந்துள்ள ‘அரண்மனை 4’ எப்படி இருக்கிறது.

சுந்தர் சியின் தங்கை தமன்னா. இவர், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சந்தோஷ் பிரதாப்பை திருமணம் செய்து கொள்கிறார். சந்தோஷ் பிரதாப் – தமன்னா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்.

ஜமீந்தார் வம்சத்தின் வாரிசான டெல்லி கணேஷூம், அவரது பேத்தி ராஷிக்கண்ணாவும் ஒரு அரண்மனையில் வசித்து வருகிறார்கள். அந்த அரண்மனையை சரி செய்து அதை விற்றுக்கொடுக்கும் பொறுப்பினை ஏற்கிறார், சந்தோஷ் பிரதாப். இதனால், அந்த அரண்மனையிலேயே, அவரது மனைவி தமன்னா மற்றும் தனது  குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தோஷ் பிரதாப் அவரது மனைவி தமன்னா இருவரும் ஒரு அமானுஷ்ய தீய சக்தியால் கொல்லப்படுகிறார்கள். போலீஸ் விசாரணையில், சந்தோஷ் பிரதாப் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாகவும், அதனால், தமன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் மூலம் இந்தத் தகவல் தமன்னாவின் அண்ணன் சுந்தர்.சி. க்கு கிடைக்கிறது.

இதையடுத்து, அரண்மனைக்கு வருகிறார், அண்ணன் சுந்தர்.சி. அப்போது ஒரு விதமான அமானுஷ்யத்தினை உணர்கிறார். அது தனது தங்கையின் குழந்தையை கொல்லத்துடிப்பதுடன், வேறு சிலரையும் கொல்லத்துடிக்கிறது. கொல்லத் துடிக்கும் அமானுஷ்ய சக்தி எது? அந்த சக்தியிடமிருந்து தங்கை மகளைக் காப்பாற்றினாரா? என்பதே, அரண்மனை 4 படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

அரண்மனை 4 , சுந்தர் சியின் வழக்கமான பேய் டெம்ப்ளேட்டுகளின் மறு உருவாக்கம். இதற்கு முன்வந்த படங்களிலிருந்து சற்று மாறுபட்டிருக்கிறது. வழக்கமாக அவருடைய படங்களில் இருக்கும் கவர்ச்சி, காதல் இதில் இல்லை! அதற்கு பதிலாக, நகைச்சுவை இருக்கிறது.

யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சேஷு என அனைவரும் அவரவர் பாணியில் சிரிக்க வைக்கின்றனர். இவர்களின் காமெடி பெண்களுக்கும், சிறுவர், சிறுமியினருக்கும் நிச்சயமாக பிடிக்கும். மறைந்த ‘லொள்ளு சபா’ சேஷு வரும் காட்சிகளிலெல்லாம், சிரிக்க வைத்து விடுகிறார். இந்த காமெடிக் கூட்டணியினர், க்ளைமாக்ஸில், பேயிடமிருந்து குழந்தையை காப்பாற்றும் காட்சிகளில், வெடிச்சிரிப்பினை வரவழைத்து விடுகிறார்கள்.

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், சந்தோஷ் பிரதாப், ராமசந்திர ராஜு, சிங்கம் புலி, சஞ்சய், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் படத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இவர்களில் கே.ஜி.எப். வில்லன் ராமச்சந்திர ராஜு சாமியார் கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

அரண்மனை, அடர்ந்த காடுகள், பெரிய நதி அம்மன் மற்றும்  அரக்கன் சிலை ஆகியன சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் இரண்டும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ணமூர்த்தி காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்.

கவர்ச்சி நாயகியாக வலம் வந்த தமன்னா, பேயிடமிருந்து குழந்தையை காப்பாற்றப் போராடும் அம்மாவாக வந்து, பெண் ரசிகைகளின் மனதில் இடம் பிடிக்கிறார்.

ராஷி கண்ணாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லை. சும்மா.. ஆங்காங்கே தலைகாட்டி விட்டுப்போகிறார்.

தமன்னாவின் குழந்தைகளாக நடித்த குழந்தைகளின் நடிப்பும் பாராட்டும்படி இருக்கிறது.

அரண்மனை 4 – குடும்பத்தினருடன் பார்க்கலாம்.