சென்சார் அதிகாரிகள் மீது இயக்குனர் வாராகி கடும் தாக்கு!

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்..

இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்த வாராகி கூறியதாவது..

“நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம்.. சம கால நிகழ்வுகளை கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன்.. படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடம் தான்.. ஆனால் இந்தப்படத்தை பார்த்துட்டு இரண்டரை மணி நேரம்  விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில  பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள்.

அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்…

சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன..? இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா..? சிவா மனசுல சக்தி வந்தப்போ மட்டும் தடை செய்யலையே.. மோடி மனசுல அமித்ஷான்னு நான் படம் எடுக்கலையே.. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம். இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது….இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன..? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..?

சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை… சென்சார் குழுவில் சினிமா தவிர்த்து பார்த்தால்  பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம்… ஆடிட்டருக்கு சென்சாரில் என்ன வேலை..? இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா..? சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை மியூட் பண்ண சொன்னாங்க.. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை.. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி..?

புகை பிடிக்கிற காட்சியிலயும் மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போட சொல்றாங்க.. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா..?. இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது..?

ஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது.. அதை நாங்க எந்த தொந்தரவும் பண்ணலை.. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க..

ரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது.. பெரிய படங்களுக்கு ஏன் பண்ணவில்லை..? பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது..  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும்  தான் சென்சாரில் இருக்கிறார்கள்.

என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத  ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான்  எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன்  பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது…

நான் ஒரு சின்ன தயாரிப்பாளர்.. ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை.  தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்… இப்படி டைட்டில் பிரச்னை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும்.. எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா.?

சான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரில் வேலை.. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை.. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன்.. இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன்… என்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்கு சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன்.. ஊடகங்கள் மூலமாக இந்த பிரச்னை உரியவர்கள் கவனத்துக்கு சென்று நல்ல தேர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார் வாராகி.