Connect with us

Cinema News

‘96’ படத்தின் முழுபிரதியும் என்னுடைய உதவியாளருடையது – பாரதிராஜா

Published

on

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘96’. இப்படத்தின் முழு கதையும் தன்னுடைய உதவியாளர் சுரேஷ் சத்ரியனுக்கு சொந்தமானது என இயக்குனர் பாரதிராஜா, ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புகார் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது..

கடந்த 2012 டிசம்பரில் எனது உதவி இயக்குநர் சுரேஷ் சத்ரியன் சென்னையில் உள்ள எனது அலுவலகத்தில் ‘92’ என்ற தலைப்பில் கூறிய கதையைக் கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன்.

ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

எனவே, அந்த காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர்,நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.

இது இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்துள்ள ‘96’ எனும் படம் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ’திரு.நந்தகோபால்’அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி. பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக்காட்டினார்கள்.

இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்து பேசினேன். எவ்வித முடிவு எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.

மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார்.

மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014-ல் எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு‘96’ ஆனது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை விசாரித்து தீர்வுகண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமலிருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கதைக்கு முழு சொந்தக்காரனும் நான் தான் என கூறி ‘96’ படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தன்னிடம் இருந்த ஆதாரங்களை பத்திரிகையாளர்கள் முன்பு சில வாரங்களுக்கு முன்னர் சமர்பித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement

Cinema News

“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Published

on

By

Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா , ரசிகர்களின் முன்னிலையில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிறைய படங்கள் தயாரித்துள்ளேன். இந்தப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம்.  முழுக்க புதுமுகங்களை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். படக்குழுவிலேயே நான் தான் வயதானவன். படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, படத்திற்கு  ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அவந்திகா பேசியதாவது…

இந்தப்பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. நடிகையாக வரவேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இப்படத்தில் வேலை  செய்தது மறக்க முடியாத அனுபவம். அஷ்வின் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படமும் உங்களுக்கு பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி

நாயகி தேஜஸ்வினி பேசியதாவது…

அஷ்வின் பீப்பிள்ஸ் லவ் என டிவிட் செய்வதன் அர்த்தம் இப்போது தான் அர்த்தம் தெரிகிறது. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஹரிஹரன் ஒவ்வொரு விசயமும் சொல்லிக்கொடுத்து செய்ய வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படக்குழுவே மிக கடுமையாக உழைத்திருக்கிறது. முதன் முதலாக பெரிய படம் செய்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் புகழ் பேசியதாவது…

உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி.  ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, படம் செய்கிறாய் என்று சொன்னார். அதற்கப்புறம் 5 மாதம் கூப்பிடவில்லை. அப்புறமாக அஷ்வின் நாயகன் என்றார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என கெஞ்சி கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. படத்தை செய்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட்டாகிவிட்டது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் பேசியதாவது…

ரசிகர்களாகிய உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்.

ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன். பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர்  A.ஹரிஹரன் கூறியதாவது…

ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது,  ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார். அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது  போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

 

Continue Reading

Cinema News

‘தங்க மீன்கள்’ சாதனா உருவாக்கிய ‘கண்ணும் கண்ணும்’ பாடலின் மறு உருவாக்கம்!

Published

on

By

‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்.

முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் இறவாப் புகழ் பெற்றவையாகும். சி ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்பு பாடல் வரிகளில் பி லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி நடனமாடியிருந்த இப்பாடலை யாரும் மறக்க முடியாது.

இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.

பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் சாதனா மிகப்பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

Cinema News

மாற்றுத் திறனாளிகள் தினம்: ‘மாயோன்’ படக்குழுவினர் விழிப்புணர்வு முயற்சி!

Published

on

By

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ”மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய  கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

நாம் அனைவரும் நம்முள் பல ‘இயலாமை’களையும், ‘அச்சங்’களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. சர்வதேச மாற்று திறனாளி தின வாழ்த்துகள்!” என பதிவிட்டிருக்கிறார்.

இறைவனின் பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகள், தங்களின் விடா முயற்சியால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனை புரிந்திட, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். மாற்று திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவகையில் பிரத்தியேக வாழ்வாதாரத்தையும், நம்முடைய சமூக கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம். அந்த வகையில் முதல் முயற்சியாக ‘மாயோன்’ படக்குழு, படத்தின் டீசரை பார்வை திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. எங்களைப்போல் தமிழ் திரையுலகினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று பணிவான வேண்டுகோளை முன்மொழிகிறோம்.

This version of the teaser is specially crafted for the visually challenged

‘மாயோன்’ படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுதிறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீஸர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.