பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்  – எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

பாரபட்சமின்றி அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும்  – எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை!

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

செப்டம்பர் 15 அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் நடைபெறும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அறிவிப்புச் செய்துள்ளார்கள். இந்த அறிவிப்பு நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் ஆயுள் சிறைவாகிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு, செம்மொழி மாநாடு, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு ஆகியவற்றை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு நன்னடத்தை, பொதுமன்னிப்பு விடுதலை அறிவிப்பு வெளியிடப்பட்டு, தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இந்த விடுதலை நடவடிக்கைகளில் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல்வேறு அரசாணைகளை காரணம் காட்டி அவர்களின் விடுதலை நிராகரிக்கப்பட்டது என்பது வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் முஸ்லிம் சிறைக்கைதிகள் 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். விடுதலையை எதிர்பார்த்த பல முஸ்லிம் சிறைக் கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்து  பிணமாகவே வெளிவந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள்,  மனைவி, குழந்தைகள் மற்றும்  உறவுகள் என அனைவரும்  ஒவ்வொரு  வருடமும்  அரசு  நமக்கு கருணை காட்டும்  என்ற  எதிர்பார்ப்புடனும்  அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள். எனவே அவர்களுக்கும் தமிழக அரசு விடுதலையை சாத்தியமாக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த சூழலில் தமிழக முதல்வர் செப்.15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்யும் என சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையில், கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும். இந்த விடுதலை நடவடிக்கையில் முஸ்லீம் ஆயுள்சிறைவாசிகள் மற்றும் 28 ஆண்டுக்கும் மேலாக சிறைச்சாலையில் தவிக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையையும் உட்படுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.