தமிழக வரலாற்றில் முதல் முறையாக  இ- பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

இந்த 2021 – 22 ஆம் ஆண்டிற்கான  பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி வரும் செப்டம்பர் 21 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. காகிதமில்லா பட்ஜெட் என்ற குறிக்கோள் அடிப்படையில்,  தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் இருக்கைக்கு முன்பு கையடக்க கணினி வைக்கப்பட்டு,  நிதியமைச்சர் பட்ஜெட் உரையை படிக்க படிக்க அந்த கணினியில் அதன் விவரங்கள் திரையில் தெரிவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இன்று பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 14 ஆம் தேதி தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைத்துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அதை தொடர்ந்து 16 ஆம் தேதிமுதல் 19 ஆம் தேதிவரை பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. அதன் பின்னர், ஆகஸ்ட் 23ஆம் தேதி நீர்வளத்துறை, 24 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம், 25 ஆம் தேதி ஊரக உள்ளாட்சி , 26ம் தேதி கூட்டுறவு, உணவு,  27ம் தேதி உயர் கல்வி – பள்ளிக்கல்வித்துறை, 28ம் தேதி நெடுஞ்சாலை மற்றும் கட்டடங்கள் துறை,  31ம்தேதி மேலாண்மை மற்றும் மீன்வளம் கால்நடை பால்வளம் என தொடர்ந்து பல்வேறு இலாக்காக்கள் தொடர்பான மானிய கோரிக்கையை அந்த அந்த துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்கின்றனர்.

செப்டம்பர் 18 மற்றும் 20ஆம் தேதிகளில் முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதல்வர், மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார்.

அரசு விடுமுறை தவிர்த்து மொத்தம் 29 நாட்கள் இந்த பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெறவுள்ளது.