Connect with us

Cinema News

தோழர் என்பதன் பொருள் மாறிவிட்டது -இயக்குநர் ராஜு முருகன் ஆதங்கம்

Published

on

ஒலிம்பியா மூவில் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்அம்பேத்குமார், ஒளிப்பதிவாளர் எஸ் கே செல்வகுமார், படத்தொகுப்பாளர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்டா, பாடலாசிரியர் யுகபாரதி, இயக்குநர் ராஜுமுருகன், படத்தின் நாயகன் நடிகர் ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த படத்தில் ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.இந்த படத்தில் ‘சே ’என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது.
பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில்,“இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா?என்று தெரியவில்லை. இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விசயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும்.
இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும்,  இந்த படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகநடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே ஈ, கற்றது தமிழ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்த ஜிப்ஸி படமும் அமையும். அவருடையதிரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக அமையும். அந்த படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முகபாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து.. இப்படி பல விசயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.
‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது? என்பதையும் பார்க்க முடியும். அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்த படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்த படம் வெளியாகவேண்டும்  நான் விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.
இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். இந்த திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்த படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம்.இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்.” என்றார்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில்,“நான் வந்தவாசி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், இயக்குநர் ராஜு முருகனின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறேன். ஒரு முறை சென்னையின் முன்னாள் மேயரும், சைதைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா சுப்ரமணியம் அவர்கள் ஒரு விழாவிற்காக ராஜுமுருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க பணித்த போது, அவருடன் பயணித்தேன். அப்போது ஜிப்ஸி படத்தின் கதையைச் சொன்னார். பட்ஜெட்டையும் சொன்னார். ஆனால் சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகியிருந்தாலும், ஜோக்கர் போன்ற படத்தை இயக்கிய இயக்குநர் படம் என்பதால்அதன் தரத்திற்காக முழு ஒத்துழைப்பு அளித்தேன். இந்த படம் ஒலிம்பியா மூவிசுக்கு சிறந்த படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.
இயக்குநர் ராஜுமுருகன் பேசுகையில்,“ இந்த படத்திற்கு அடையாளமாக இருக்கும் இந்த பாடலை முதன்முதலாக ஊடகவியலாளர்கள் முன் திரையிடவேண்டும் என்று விரும்பினேன்.
தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்கள் சம்மதிக்கவில்லை என்றால் இந்த படத்தை இந்த தரத்தில் தற்போது எடுத்திருக்க இயலாது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம்.என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறுவேறு அல்ல.
இந்த படத்திற்கு ‘தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்’ என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என  கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள். யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம்.அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.
இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம்.இந்த படத்தில்ஒன்பது பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது.
இந்த படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு அவருக்கு திரும்ப கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.
இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி.” என்றார்.
நடிகர் ஜீவா பேசுகையில்.“ ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது.” என்று இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டரைசேஷன் ஆச்சரியப்படுத்தியது.கதையில் ஒரு உண்மை இருந்தது.
மனிதநேயத்தை மதிக்கவேண்டும், இயற்கையும் கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும்ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.
படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார்.
இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி
கற்றது தமிழ்,ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்று என்னை கேட்ட போது, இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது.
நாகூர்,வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம்.
இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று அனைவரும் பாராட்டுவார்கள். இதற்காக இயக்குநருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்.”என்றார்.
‘வெரி வெரி பேட்…’ எனத் தொடங்கும் அந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்த சிங்கிள் ட்ராக்கை இன்று படக்குழுவினர் வெளியிட்டனர்.

Advertisement

Cinema News

“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Published

on

By

Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா , ரசிகர்களின் முன்னிலையில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிறைய படங்கள் தயாரித்துள்ளேன். இந்தப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம்.  முழுக்க புதுமுகங்களை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். படக்குழுவிலேயே நான் தான் வயதானவன். படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, படத்திற்கு  ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அவந்திகா பேசியதாவது…

இந்தப்பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. நடிகையாக வரவேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இப்படத்தில் வேலை  செய்தது மறக்க முடியாத அனுபவம். அஷ்வின் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படமும் உங்களுக்கு பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி

நாயகி தேஜஸ்வினி பேசியதாவது…

அஷ்வின் பீப்பிள்ஸ் லவ் என டிவிட் செய்வதன் அர்த்தம் இப்போது தான் அர்த்தம் தெரிகிறது. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஹரிஹரன் ஒவ்வொரு விசயமும் சொல்லிக்கொடுத்து செய்ய வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படக்குழுவே மிக கடுமையாக உழைத்திருக்கிறது. முதன் முதலாக பெரிய படம் செய்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் புகழ் பேசியதாவது…

உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி.  ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, படம் செய்கிறாய் என்று சொன்னார். அதற்கப்புறம் 5 மாதம் கூப்பிடவில்லை. அப்புறமாக அஷ்வின் நாயகன் என்றார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என கெஞ்சி கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. படத்தை செய்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட்டாகிவிட்டது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் பேசியதாவது…

ரசிகர்களாகிய உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்.

ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன். பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர்  A.ஹரிஹரன் கூறியதாவது…

ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது,  ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார். அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது  போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

 

Continue Reading

Cinema News

‘தங்க மீன்கள்’ சாதனா உருவாக்கிய ‘கண்ணும் கண்ணும்’ பாடலின் மறு உருவாக்கம்!

Published

on

By

‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்.

முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் இறவாப் புகழ் பெற்றவையாகும். சி ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்பு பாடல் வரிகளில் பி லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி நடனமாடியிருந்த இப்பாடலை யாரும் மறக்க முடியாது.

இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.

பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் சாதனா மிகப்பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

Cinema News

மாற்றுத் திறனாளிகள் தினம்: ‘மாயோன்’ படக்குழுவினர் விழிப்புணர்வு முயற்சி!

Published

on

By

இன்று சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் டீஸர், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ”மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய  கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்தியேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம்.

நாம் அனைவரும் நம்முள் பல ‘இயலாமை’களையும், ‘அச்சங்’களையும் கொண்டிருக்கிறோம். சிலருக்கு இவை இயல்பாக இருக்கும். பலருக்கு இவை பலரால் வழங்கப்பட்டதாக இருக்கும் அல்லது சமூகத்தின் வாயிலாக கிடைக்கப் பெற்றதாக இருக்கும். எனவே அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரம் மற்றும் சமூகத்தை நோக்கி ஆரோக்கியமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ளது. சர்வதேச மாற்று திறனாளி தின வாழ்த்துகள்!” என பதிவிட்டிருக்கிறார்.

இறைவனின் பிள்ளைகளான மாற்றுத்திறனாளிகள், தங்களின் விடா முயற்சியால் விதிக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனை புரிந்திட, நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். மாற்று திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்றவகையில் பிரத்தியேக வாழ்வாதாரத்தையும், நம்முடைய சமூக கட்டமைப்பையும் உருவாக்குவதற்கு இந்நாளில் சபதம் ஏற்போம். அந்த வகையில் முதல் முயற்சியாக ‘மாயோன்’ படக்குழு, படத்தின் டீசரை பார்வை திறன் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் உருவாக்கி, அவர்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. எங்களைப்போல் தமிழ் திரையுலகினர், மாற்றுத்திறனாளிகளுக்கும் சென்றடையும் வகையில் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று பணிவான வேண்டுகோளை முன்மொழிகிறோம்.

This version of the teaser is specially crafted for the visually challenged

‘மாயோன்’ படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே எஸ் ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுதிறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் டீஸர் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.