‘கந்து வட்டி மாஃபியாக்களின் முகத்திரையை கிழித்திருக்கிறேன்.’-சீயோன்

அன்மையில் பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டிக் கொடுமையினால் இசக்கிமுத்து-சுப்புலட்சுமி குடும்பத்தினர் தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவங்களைப் போல் கந்துவட்டியினால் நடக்கும் பல சம்பவங்களை தொகுத்து ‘பொதுநலன் கருதி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கியிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் கூறும்போது…

‘கந்து வட்டி மாஃபியாக்களின் முகத்திரையை கிழித்திருக்கிறேன். இந்த கந்துவட்டிக் காரர்களின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள். அவர்களது அதிகாரப் பலத்தின் எல்லை என்ன? அவர்களது குழு எப்படி இயங்குகிறது என அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறேன். இந்தப் படத்தால் இப்போதே எனக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்திருக்கிறது. வெளியானவுடன் இன்னும் அதிக மிரட்டல்கள் வரும்.’ என்கிறார் இயக்குனர் சீயோன்.

‘சூதுகவ்வும்’ கருணாகரன்,சந்தோஷ், அருண் ஆதித், சுபிக்ஷா, அனுசித்ரா, லிசா ஆகியோர் நடித்துள்ளனர். AVR புரடக்ஷன் சார்பில் அன்புவேல் ராஜன் தயாரித்துள்ள ‘பொதுநலன் கருதி’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.