சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன்..! – நடிகை அமலா பேட்டி!

இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘மைதிலி என்னை காதலி’ என்கிற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா. ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து 90களில் தமிழ் சினிமாவின் கனவுக் கன்னியாக இருந்தவர். திருமணத்திற்கு பிறகு அவ்வபோது நடித்து வந்த அவர், தற்போது ‘கணம்’ திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில்  நடிக்க வந்து இருக்கிறார்.

கணம் படத்தில் ஷர்வானந்துக்கு அம்மாவக நடித்துள்ள நடிகை அமலாவிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்..

தமிழ்சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான நீங்கள் சென்னையையும், தமிழ் சினிமாவையும் நினைப்பதுண்டா?

‘எப்படி நினைக்காமல் இருக்க முடியும். தமிழ்நாட்டுக்கு நான் எப்போது வந்தாலும், ரசிகர்களின் அன்பும், வரவேற்பும்  பார்க்கும் போது, எனது சொந்த வீட்டிற்கே வந்ததை போல் மகிழ்ச்சியாய் இருக்கும். திருமணத்திற்கு பிறகு சென்னையை அதிகமாக மிஸ் செய்தேன்!  சென்னையில் கடற்கரை ஓரமாக தான், நான் வசித்து வந்தேன். அந்த கடல் அலைகளின் ஓசைகளை கேட்டு பழகிய எனக்கு சென்னையை விட்டு சென்றது, ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. எனது கணவர் நாகார்ஜுனா, ஒரு சி.டியில் கடலின் ஓசையை ஒலிக்க விடுவார். அது கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது. அதன் பின்னர் ஹைதராபாத் பின் புதிய சூழல் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்பட்டுவிட்டது.

தமிழ் சினிமாவின் பொற்காலாம் என சொல்லப்படும் காலத்தில் நானும் நடித்துள்ளேன். என நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், புகழ்பெற்ற  இயக்குநர்கள், இளையராஜாவின் இசை என  அவர்களுடன் நான் இணைந்ததிருந்தது மகிழ்ச்சி.

‘கணம்’  படத்தில் நடிக்க காரணம் என்ன? இயக்குநர் ஸ்ரீகார்த்திக் எப்படி உங்களை சம்மதிக்க வைத்தார்?

இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கதையை விளக்கிச் சொன்ன விதமும் , கதையும் , நன்றாகவும், அழகாக இருந்தது. இந்த மாதிரி  கதையை நீண்ட நாட்கள் கழித்துக் கேட்கிறேன். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதனால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். வழக்கத்துக்கு மாறான ஒரு படம். மூன்று கதாபாத்திரங்களின் பயணமே இந்தக் கதை. இதில் நாயகன் ஷர்வானந்தின் கதையில் எனக்கும் சிறிய பங்கு இருக்கிறது.

கணம் படத்தில்  இன்றைய தலைமுறைக் கலைஞர்களோட நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

மிகத்திறமையான நடிகர் ஷர்வானந்த். அவருக்கும் எனக்கும்  தான் அதிக காட்சிகள், நாங்கள் நடித்த காட்சிகள்  அனைவருக்கும் பிடிக்கும். இயக்குனர் ஶ்ரீ கார்த்திக்கு திருப்தியாகும் வரை ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக படமாக்கி இருக்கிறார். படம் பார்க்கும் போது உங்களுக்கு மிகவும் பிடிக்கும்.  எமோஷனல் காட்சிகள் தவிர நகைச்சுவை காட்சிகளும் இருக்கிறது. கண்டிப்பாக சிரிப்பீர்கள். அம்மா என்றாலே அன்பும், தியாகமும் நிறந்திருக்கும். இப்படத்தில் அம்மா கதாபாத்திரம் வந்த பிறகு ஆழமான உணர்வுகள் கதையில் வரும். அதற்கேற்ற ஆழமான இசையும் உள்ளது. அது உங்களை நெகிழச்செய்யும்.

கணம் படம் எதை பற்றிய கதை?

கணம் படத்தை ஒரு சாகசப் பயணக் கதை என்று சொல்லலாம். 3 சாதாரண மனிதர்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய கதை. ஒவ்வொரு தோல்விக்குப் பின்னர் எழுவது எப்படி என்பதை அழகாக, கவித்துவமாகச் சொல்லியிருக்கிறார்கள். அதில் நிறைய சிரிப்பும்  நிறைந்திருக்கும். ஒரு அதிர்ச்சி யும் இருக்கும். அந்த அதிர்ச்சியின் மூலம் கூட வாழ்க்கையைப் பற்றி புரிய வரும். நமக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்துவது எப்படி என்று உணர வைக்கும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையைத் தரும், தன்னம்பிக்கை பற்றிய கதை என்றும் சொல்லலாம்..

குறிப்பிட்ட காலப் பயணத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் எந்த காலத்துக்குப் பயணப்படுவீர்கள்?

நான் எதிர்காலத்துக்குத் தான் செல்ல விரும்புகிறேன். பல வேலைகளைச் செய்து வருகிறோம், அது எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும். நினைத்துப் பாருங்கள், யாராவது எதிர்காலத்தில் இருந்து வந்து, ‘கவலை வேண்டாம், இந்தக் காரியம் சரியாக நடக்கும்’ என்று சொன்னால் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்?அது கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்.

கணம் எப்படி தமிழ் ரசிகர்களையும், தெலுங்கு ரசிகர்களையும் ஒரே நேரத்தில் கவரும் என்று நினைக்கிறீர்கள்?

மனித உணர்ச்சிகள் உலகம் முழுக்க பொதுவானதுதான். எனவே கணம் படத்தில் இருக்கும் உணர்ச்சிகள் இளைஞர்களை சென்றடைந்துவிட்டால் கண்டிப்பாகப் படம் தேசிய அளவில், பான் இந்தியா என்று சொல்லும்படி பிரபலமாகும். கண்டிப்பாக திரையில் தமிழ், தெலுங்கு என அத்தனை ரசிகர்களுக்கும் படம் சென்று சேரும் என்று எனக்குத் தெரியும். அம்மா பாசம், இளைஞர்களுக்கான தடைகள், போராட்டங்கள், இதெல்லாம் அனைவருக்கும் பொது. இந்த விஷயங்களை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்று பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.

தமிழில் டப்பிங் செய்தது எப்படி இருந்தது?

வசனமாகக் கொடுத்தால் நன்றாக தமிழ் பேசிவிடுவேன். ஆனால் சாதரணமாகப் பேசும்போது நான் சிந்திக்கும் ஆங்கிலத்தை ஒவ்வொரு வார்த்தையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் பேசத் தாமதமாகிவிடும். இப்போது பேசும் மொழி தெலுங்கு என்பதால் நிறைய வார்த்தைகள் தெலுங்கு வேறு வருகிறது. ஆனால் டப்பிங் செய்யும்போது ஸ்ரீகார்த்திக்கே ஆச்சரியப்பட்டுப் போனார். முதலில் தமிழில் தான் பேசுவேன். தெலுங்கை விட அது சுலபமாக இருந்தது.

ஸ்ரீகார்த்திக் குழுவினர் மிகச் சரியான ஒருங்கிணைப்போடு, திட்டமிடுதலோடு இருந்தனர். ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சரியாக வைத்திருந்தனர். அதனால் நடிகர்கள் எங்களுக்கு மிகச் சுலபமாக இருந்தது. இப்படி ஒரு தொழில் முறை நேர்த்தியைப் பாராட்டியாக வேண்டும். இந்த நேர்த்தியால் தான்’ ட்ரீம் வாரியர்’ இவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறது என்று நினைக்கிறேன். என்றார்.

Leave A Reply

Your email address will not be published.