உலகத்தரத்தில் சூர்யா – ஜோதிகா தயாரித்த ‘ஒ மை டாக்’!

2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம், ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது நடிகர், சிவகுமார், விஜயகுமார், அருண் விஜய், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் அவருடைய மகன் ஆர்ணவ் விஜய் மற்றும் அவருடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘ஓ மை டாக்’ படத்தை இயக்கிய இயக்குநர் சரோவ் சண்முகம் கூறியதாவது..

‘ஓ மை டாக்’, வால்ட் டிஸ்னி தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம் போல் உருவாக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப்படத்தின் கருவை தயார் செய்துவிட்டு ‘2டி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை சந்தித்தேன். கதையை கேட்டு உடனே சம்மதம் சொன்னார். அதன்  பிறகு சூர்யா சாரை சந்தித்து அவரிடம் கதையை சொன்னபோது, அவர், மிகச் சிறப்பாக இருக்கிறது  என்று சொன்னார்.

இரண்டு நாள் கழித்து சமூக வலைதளப் பக்கமொன்றில் அருண் விஜய் மற்றும் ஆர்ணவ் விஜய்யுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பார்த்த சூர்யா சார் . ‘ஆர்ணவ் மற்றும் அருண் விஜய்யை சந்தித்து கதையைச் சொல்லுங்கள். அவர்கள் நடிக்க சம்மதம் என்றால் இந்த படத்தை தயாரிக்கலாம்’ என்றார். அருண் விஜய்யை சந்தித்து கதை சொன்னவுடன் அவரும் ஆர்ணவ்வை அறிமுகப்படுத்த சம்மதம் தெரிவித்தார். அதன்பிறகு அவரிடமே கெஞ்சி கூத்தாடி இந்த படத்தில் நீங்களும் உங்கள் அப்பாவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஒப்புதல் கொடுத்ததால்தான் இந்தப் படம் எவ்வளவு பிரமாண்டமாகவும், தரமாகவும் உருவானது.

இதனை ஒரு சர்வதேச தரத்திலான குழந்தைகளுக்கான படைப்பாகத்தான் உருவாக்கியிருக்கிறோம். இந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது ஆர்ணவ்விற்கு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். ஏனெனில் அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பு இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. என்றார்.

அறிமுக குழந்தை நட்சத்திரம் ஆர்ணவ் விஜய் பேசுகையில்,

‘இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை முதலில் சூர்யா அங்கிளும், ஜோதிகா ஆன்ட்டியும் தேர்வு செய்தார்கள். ராஜா அங்கிள், சிவக்குமார் தாத்தா, சரோவ் அங்கிள் அனைவருக்கும் நன்றி. தாத்தா, அப்பா என இரண்டு பேருடன் என்னுடைய முதல் படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு. இதற்காக 2டி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்கூட நடித்தவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகினார்கள். ஏப்ரல் 21ஆம் தேதியன்று வெளியாகும் ‘ஓ மை டாக்’ படத்தை பாருங்கள். அனைவரும் ஆசி வழங்குங்கள் ஆதரவு தாருங்கள். ” என்றார்.

நடிகர் விஜயகுமார் பேசுகையில்,

” 2டி என்ற நிறுவனம் தரமான படங்களை தயாரித்து வருகிறது. இதற்கு அண்ணன் சிவக்குமார் தான் மூல காரணம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் கிட்டத்தட்ட 50 நாட்கள் நடைபெற்றது. இந்தப் படத்தின் தொடக்க விழாவின்போது,‘ இது போன்ற அபூர்வமான வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. ‘தாத்தா மகன்  பேரன் என்ற மூன்று தலைமுறையினரும் இணைந்து நடித்து இதற்கு முன் தெலுங்கில் ஒரு படம் வெளியானது. அதன் பிறகு தமிழில் இந்தப் படம்தான் தயாராகிறது’ என சிவகுமார் குறிப்பிட்டார். உண்மையிலேயே இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.  என்றார்.

நடிகர் சிவகுமார் பேசுகையில்,

‘வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இந்தப்படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாக காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லி படமெடுத்திருக்கிறார். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை பார்த்து விட்டேன். மிக நேர்த்தியாக சர்வதேச தரத்தில் உருவாகி இருக்கிறது.

நடிகர் அருண் விஜய் பேசுகையில்,

‘என்னுடைய மகன் ஆர்ணவ் விஜய்க்கு இது போன்றதொரு அறிமுகத்தை உருவாக்கிக் கொடுத்த சூர்யா- ஜோதிகா,  ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் 2d பட நிறுவனத்திற்கு நன்றி.

அர்ணவ் முதல் படத்திலேயே என்னுடன் நடிப்பதை விட அவருடைய தாத்தா உடன் இணைந்து நடிப்பதை பாக்கியமாக கருதியதால், இந்த வாய்ப்பை தவற விட வேண்டாம் என எண்ணி, அவரை நட்சத்திரமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். இதனை கடவுளின் ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். இயக்குநர் சரோவ் சண்முகத்திற்கு  நன்றி.

இது குழந்தைகளுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு அற்புதமான கதை. நிறைய உணர்வுகள் அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. என்னுடைய கதாபாத்திரம் மற்றும் என்னுடைய அப்பாவின் கதாபாத்திரம் ஆர்ணவ் விஜய் கதாபாத்திரம் ஆகிய அனைத்தையும் யதார்த்தமாக இயக்குநர் எழுதியிருந்தார். கதையைக் கேட்டபோது ஆர்ணவ் விஜய்யின் 70 முதல் 80 வீத சேட்டைகள் கதையில் இடம் பெற்றிருக்கிறது. அதனால் அவன் எளிதாக நடித்து விடுவான் என்று நம்பினேன். ஆர்ணவிற்கு நாய்க்குட்டி என்றால் உயிர். ஆர்ணவ் விஜய்யுடன் நடித்த சுட்டி குழந்தைகள் அனைவருடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

படப்பிடிப்பு தருணத்தில் எதையும் திட்டமிட்டு படமாக்க முடியாது. குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டிகள் அவர்களுக்கான மனநிலையுடன் நடிக்கும் போது அதனை படமாக்கி கொள்ள வேண்டும். அதனால் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத் தான் தூணாக இருந்து செயல்பட்டார் என சொல்லலாம். படப்பிடிப்பு குழுவினரின் ஒட்டுமொத்த உழைப்பும் இதில் இருக்கிறது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற மோட்டிவேஷனல் திரைப்படமாக இருக்கும். டிஸ்னி படைப்பு போல் ‘ஓ மை டாக்’ உருவாகி இருக்கிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று அதுவும் உலகம் முழுவதும் ‘ஓ மை டாக்’ வெளியாகிறது. கோடை விடுமுறை என்பதால் இந்தப் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.