வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்க, விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம், மார்ச் 31 ஆம் தேதி வெளியாகிறது.
விடுதலை படத்தில் பழங்குடி பெண்ணாக நடித்துள்ள நடிகை பாவனி ஸ்ரீ, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரும், இசையமைப்பாளாரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷின் தங்கை. முதன் முதலில் தெலுங்கு இணைய தள தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் சேதுபதியின் தங்கையாக க.பெ. ரணசிங்கம் படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
விடுதலை படத்தில் நடித்தது குறித்து நடிகை பவானி ஶ்ரீ கூறியதாவது…
‘நக்சலைட்டுகளைத் தேடி கிராமத்திற்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிள் சூரியுடன் அழகான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
வெற்றிமாறன் சாருடன் பணிபுரிவது என்பது எல்லா நடிகருக்கும் நீண்ட நாள் கனவு, நானும் இதற்கு விதிவிலக்கல்ல. என்னுடைய இரண்டாவது படத்திலேயே அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு அடர்ந்த காடுகளுக்குள் நடந்தது. காடுகளின் சூழலுக்கு நான் புதியவள். இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. உணர்ச்சிப்பூர்வமாக கதாபாத்திரங்களை உருவாக்குவதில் அவர் சிறந்த இயக்குநர். சூரி சார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்து இந்தப் படத்தில் தீவிரமான கதையின் நாயகனாக அவர் மாறியிருப்பது அவருக்கு பாராட்டுகளை குவிக்கும்’’.
இப்படத்தின் இரண்டு பாடல்களிலும் நான் நடித்து இருக்கிறேன். பாடல்கள் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கான பாராட்டுகளைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அற்புதமான பாடல்களால் படத்தை அழகுபடுத்தியிருக்கும் ‘மேஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா சாருக்கு எல்லாப் புகழும் சேரும்.
நான் இசைப் பயிற்சியை சரியாக மேற்கொள்ளவில்லை. அதனால் தான் இளையராஜா சார் கூட நான் ஒரு பாடலை பாடச்சொல்லி கேட்டபோது, அந்த அளவுக்கு நான் சிறந்த பாடகர் இல்லை என்று மறுத்து விட்டேன்’’.
நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனாலும், படக்குழுவில் படம் பார்த்த அனைவரும் ‘விடுதலை’ நன்றாக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். என்ற அவர், ரசிகர்களுடன் விடுதலை படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறினார்.