அன்பிற்கினியாள்- விமர்சனம்!

மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் ‘ஹெலன்’.

அந்த படத்தை தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் தயாரித்துள்ளார் நடிகர், தயாரிப்பாளரான அருண்பாண்டியன்.

‘சக்திவேலன் பிலிம்பேக்டரி’  சார்பில் சக்திவேலன் படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்பா, மகளான அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இருவருமே படத்திலும் அப்பா, மகளாகவே நடித்துள்ளனர். மலையாளத்தில் ஹெலனை பார்த்து ரசித்தவர்களும் இந்த ‘அன்பிற்கினியா’ ளை பார்த்து ரசிக்கும் படியாகவே உருவாக்கியிருக்கின்றனர்.

ரெஸ்டாரண்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக்கொள்ளும் கீர்த்திபாண்டியன், அவர் அனுபவிக்கும் அந்த வேதனையை படம் பார்ப்பவர்களும் உணரும்படி நடித்துள்ளார். தேர்ந்த நடிப்பு. பாராட்டுக்கள் குவியும். அதற்கு அவர் தகுதியானவரும் கூட.

கீர்த்திபாண்டியனுடன் சேர்ந்து நாமும் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றனர். இயக்குனர் கோகுல் மற்றும் அவருக்கு பலம் சேர்த்த உதவியாளர்களுக்கும் பாராட்டுக்கள்.

அருண்பாண்டியன் தந்தையாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார். ‘இணைந்த கைகள்’ படத்தின் ‘அந்தி நேர தென்றல் காற்று’ பாடலில் இருக்கும் ஒரு எமோஷனல் ஃபீல்,  அவர் நடித்திருக்கும் சில காட்சிகளில் அதே எமோஷனல் ஃபீலிங்.

அருண்பாண்டியன் தொடர்ந்து நடிக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

கீர்த்திபாண்டியன் காதலராக நடித்த பிரவின், ரெஸ்டாரண்ட் மேனேஜர், போலீஸ் இன்ஸ்பெக்டர், வாட்ச்மேன் என படத்தில் நடித்துள்ள அனைவரும் அந்தந்த கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பெரும்பலமாக ‘கேமராமேன்’ மகேஷ்முத்துசாமியும், ‘இசை அமைப்பாளர்’ ஜாவித்தும் அமைந்துள்ளனர்.

படம் ஆரம்பித்த கொஞ்ச நேரம் நெளியும்படி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இந்தவாரத்தில் வெளியான படங்களில் பார்க்கும்படியான,ரசிக்கும்படியான படமாக ‘அன்பிற்கினியாள்’ நிச்சயம் இருப்பாள்.

குடும்பத்தினருடன் பார்க்க தகுதியான படம்.

Comments are closed.