சியான்கள் – விமர்சனம்!

கே.எல். புரடெக்‌ஷன்ஸ் சார்பில் ஜி.கரிகாலன் தயாரித்து, நடித்துள்ள படம் ‘சியான்கள். இப்படத்தை வைகறை பாலன் இயக்கியுள்ளார்.

கரிகாலன், ரிஷா ஹரிதாஸ் நாயகன், நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், சமுத்திர சீனி, சக்திவேல், நாராயணசாமி, துரை சுந்தரம் ஆகியோர் 7 சீயான்களாக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தென் தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் தாத்தாவை ‘சீயான்’ என்றழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது.  

முதியவர்கள், ஒவ்வொரு தலைமுறையின் ஆணிவேர்களாக கருதப்பட வேண்டியவர்கள். வயது மூப்பின் காரணமாக வரக்கூடிய உடல்நலம், மனநலம் சார்ந்த பிரச்னைகள் இவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை.

இந்நிலையில் இவர்கள் தங்களுடைய உறவுகளால் ஒதுக்கப்பட்டால் என்ன நடக்கும், என்பதை இயக்குனர் வைகறை பாலன் ‘சியான்கள்’ படத்தின் மூலம் அவர் சந்தித்த கதாபாத்திரங்களை தன்னுடைய ஸ்டைலில் இயக்கியுள்ளார். எப்படியிருக்கிறது? பார்க்கலாம்.

இந்தப் படத்தில் வரும் 7 சியான்களில் நளினிகாந்த் ஒருவரைத் தவிர மற்ற 6 பேரும் அவர்களின் குடும்பத்தினருக்கும், ஊருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் ஊரைச்சுற்றி வருகிறார்கள். கோழி, ஆடுகளை களவாண்டு தின்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. சாமிக்கு நேர்ந்த ஆடாக இருந்தாலும் அதை திருடத் தயங்குவதில்லை.  

அரசு கொடுக்கும் முதியோர் பென்சனில் மூக்கு முட்ட குடிப்பது, அடுத்தவர் பொண்டாட்டியை ரசிப்பது, இத்யாதி இவர்களின் பொழுதுபோக்கு. இதில் ஒருவருக்கு எப்படியாவது வெள்ளைக்கார பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துவிட வேண்டும் என்ற ஆசை. இவையெல்லாம் அவர்களின் குறும்பு என்று சொல்கிறார், இயக்குனர் வைகறை பாலன். அதை ரசிகர்கள் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த 7 பேரில் கண்ணியமான ‘சியான்’ நளினிகாந்தும் அவருடைய பொண்டாட்டியாக வரும்  அந்த அம்மாச்சியும் தான். வணங்கத் தகுந்தவர்கள். நளினிகாந்தின் நியாயமான ஆசை, எப்படியாவது ஏரோ ப்ளேனில் பயணம் செய்வது தான். அதற்காக கையில் கிடைக்கும் காசை சேமிக்கிறார். அதை தெரிந்து கொள்ளும் அவரது பொண்டாட்டி தனது பங்காக சிறிய காசை கொடுப்பது அழகு. ஓடிபிடித்து விளையாடும் அவர்களது காதல் பொறாமை கொள்ளச் செய்கிறது.

விமானத்தில் பயணம் செய்யும் செலவுக்காக வைத்திருந்த தன்னுடைய மனைவியின் தண்டட்டியை இன்னொருவருக்கு கொடுத்து உதவும் போது நளினிகாந்த் சியான் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.

கரிகாலன் இந்தப் படத்தை தயாரித்த ஒரே காரணத்தால் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. இவரைப்போலவே படத்தில் பல கதாபாத்திரங்கள்.

இன்றைய சமூகத்திற்கு தேவைப்படுகிற ஒரு கதைக் கருவை நல்ல திரைக்கதையாக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை. அதை கெடுக்காமல் இருந்திருக்கலாம்.

சியான்கள் இம்சிக்கிறார்கள்

Comments are closed.