கூகுள் குட்டப்பா – விமர்சனம்!

குட்டப்பாவை குடும்பத்துடன் பார்க்கலாம்!

மலையாளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும், பாராட்டையும் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ .  இப்படம் தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ வாக வெளியாகியிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கிறார். இரட்டை இயக்குநர்கள் சபரி, சரவணன் இயக்கி இப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள். குஞ்சப்பாவை மிஞ்சுமா குட்டப்பா? பார்க்கலாம்.

இயற்கை வளமிக்க ஒரு கிராமத்தில் தந்தையும், மகனுமான கே.எஸ்.ரவிக்குமாரும் பிக்பாஸ் தர்ஷனும் வசிக்கிறார்கள்.  இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழ்வதை அதிகம் விரும்புபவர் கே.எஸ்.ரவிக்குமார். இதில் சற்று விலகி இருப்பவர் பிக்பாஸ் தர்ஷன். அவர் ஒரு ரோபோடிக்ஸ் இன்ஜினியர். அவருக்கு ஜெர்மனியில் உள்ள ‘ரோபோ’ தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது.

இதனால் தர்ஷன் தனது அப்பாவை கவனித்து கொள்ள ஆட்களை நியமித்துவிட்டு ஜெர்மனிக்கு சென்று விடுகிறார்.  ஆனால் கே எஸ் ரவிக்குமார் வேலையாட்களுடன் இணைந்து செயல்படமுடியாமல் போகிறது.

இதனால் அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் உதவிக்காக தர்ஷன், தனது நிறுவனம் தயாரித்த ரோபோவை கொடுக்க  முடிவு  செய்கிறார்.  முதலில் கே.எஸ்.ரவிகுமாருக்கும் ரோபோவுக்கும் இடையே இணக்கமே இல்லாமல் இருக்கிறது. பின்னர் ரோபோவின் மேல் கே.எஸ்.ரவிகுமாருக்கு சக மனிதரை போலான உணர்வு மேலோங்குகிறது. குட்டப்பா என பெயரிடப்பட்ட அந்த ரோபோவே தனது எஞ்சிய வாழ்க்கை, பொழுதுபோக்கு என வாழப்பழகி விடுகிறார்.

இந்நிலையில் ரோபோவினால் தனது அப்பாவின் உயிருக்கு ஆபத்து என தர்ஷனுக்கு தெரிய வருகிறது. இதன்பிறகு என்ன நடக்கிறது. தர்ஷன்   அப்பாவை காப்பாற்றினாரா இல்லையா, என்பதே படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

சுப்பிரமணி என்ற கதாப்பாத்திரத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்  கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களின் முழுக்கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து கொள்கிறார். இயக்குனர்களின் தேர்வு கச்சிதம். மகனிடம் மனம் விட்டு பேசமுடியாத அவரது ஏக்கத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அனைவரையும் கண் கசியச் செய்கிறார். அதேபோல் ரோபோவுக்கும் அவருக்குமான காட்சிகளில் பல இடங்களில் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

கே.எஸ்.ரவிக்குமாரின் மகனாக நடித்திருக்கும் தர்ஷன்,  இவரும் கதாபாத்திரத்திற்கான சரியான தேர்வு. இருப்பினும் நடிப்பில் இன்னும் சிறப்பான பங்கினை கொடுத்தே ஆக வேண்டும்.

தர்ஷனின் காதலியாக வரும் லொஸ்லியா அய்யோ பரிதாபம். குறிப்பிட்டு சொல்ல ஒன்றுமில்லை.

குட்டப்பாவாக  வரும் ரோபோ, வழக்கமான ரோபோ மாதிரியாக இல்லாமல் மனிதரை போன்ற அசைவுகள் இருப்பதால் சிறுவர், சிறுமிகளை அதிகம் ஈர்த்துவிடுகிறது. இதுவே படத்திற்கான பலமாகவும் இருக்கிறது. ரோபோவாக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் பல இருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க முடிகிறது. பூவையார், ராகுல், பிளாக் பாண்டி ஆகியோரும் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே! ஆர்வியின் ஒளிப்பதிவு  கச்சிதம்.

அரவணைப்புக்காக ஏங்கும்  பெற்றோர்களின்  ஏக்கத்தையும், எதிர்ப்பார்ப்பினையும் பொழுது போக்குடனும் குட்டாப்பாவின் குதூகலத்துடனும் சொல்லியிருக்கிறார்கள் அறிமுக இரட்டை இயக்குனர்கள் சபரி, சரவணன்.

குட்டப்பாவை குடும்பத்துடன் பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.