மாநாடு – தீபவளிக்கு வரவில்லையா? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம்!

சிலம்பரசன், கல்யாணி ப்ரியதர்ஷன் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார். இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்தது.  இதனால் சிலம்பரசன் ரசிகர்கள் படத்தினை எதிர்பார்த்து  காத்திருந்தனர்.

இந் நிலையில் இப்படம் குறித்த ஒரு அறிவிப்பினை ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

அதில்…

திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்…

நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது.

யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனமுமல்ல.

நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன் மீது மிகப் பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது. அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காய் பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் இலாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது.

சில காரணங்களுக்காக ஏன்  என் படமும் அதன் வெற்றியும்  பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. நவம்பர் 25ந் தேதி படம் வெளியாகும். மாநாடு தீபாவளி வெளியீட்டிலிருந்து வெளியேறுகிறது.

வெளியாகும் படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள். பொறுமையாக எங்கள் முடிவை ஏற்கப்போகும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள்.. என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.