குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் மே 17ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Mr.லோக்கல் படம் குறித்து சிவகார்த்திகேயன் பேசியபோது…
Mr.லோக்கல். மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்தது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.
நயன்தாரா உடன் நான் நடிக்கும் இரண்டாவது படம். வேலைக்காரன் படத்தில் அவருக்கு பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார்.
இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
சினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது என்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ சமயத்தில் எப்படி அவரை சந்தித்தேனோ, அதே மாதிரி தான் இன்றும் இருக்கிறார் சிவகார்த்திகேயன். எவ்வளவு பெரிய படத்தையும் தன் தோள்களில் தாங்கக் கூடிய ஒரு ஹீரோவாக இன்று மாறியிருக்கிறார். வழக்கமாக விநியோகஸ்தர்கள் தான் எப்போ ரிலீஸ் எப்போ ரிலீஸ்னு கேட்பாங்க. ஆனால் இந்த படத்துக்கு குழந்தைகள், குடும்பங்கள் எப்போ ரிலீஸ்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. ராஜேஷ் ஒரு எளிமையான இயக்குனர். எந்த சூழ்நிலையிலும் கூலாக இருப்பவர். டி.ராஜேந்தர் சாருக்கு அடுத்து அதிகப்படியான துறைகளில் வித்தகர் ஹிப் ஹாப் ஆதி தான். ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன்தாரா. முழுநீள பொழுதுபோக்கு திரைப்படமாக வந்திருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான, சிரமமான காலகட்டத்தில் எனக்கு இந்த படத்தை பண்ணி கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதை எக்காலத்திலும் மறக்க மாட்டேன் என்றார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா.
Comments are closed.