“நட்சத்திரம் நகர்கிறது ” காதலைப் பற்றிய  படம்.- பா. இரஞ்சித்!

இயக்குனர் பா.இரஞ்சித்  சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு  “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன்,  மற்றும்  மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை  தயாரித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர்,  சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தென்மா இசையமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, “நட்சத்திரம் நகர்கிறது ” காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது. அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது. இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு. காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை . இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் “நட்சத்திரம் நகர்கிறது”

இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப்பற்றியும், திரு நங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம். பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்கபேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு.

இசைஞானி இளையராஜாவுடன் இணைவீர்களா ? என்கிற கேள்விக்கு…

எனக்கு ரொம்ப பிடித்தவர்களை தூர நின்று பார்ப்பேன் .இசைஞானியோடு இணைந்து வேலை செய்யமுடியும்னு இன்றுவரை நான் நினைத்ததில்லை. அவர் கிட்ட நெருங்கவே தயக்கம் இருக்கு. அவர் பெரிய மேதை. இசைஞானி இளையராஜா இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவேமுடியாது. எனக்கு வழிகாட்டிய என் முன்னத்தி ஏரை நம்பித்தான் எங்கள் வீட்டில் என்னை சினிமாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் பாடல்கள் எனக்கு சினிமா பாடல்கள்களாய் இல்லாமல் தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது. ராஜாவை தினம் தினம் ரசிப்பவன் நான்.

“நட்சத்திரம் நகர்கிறது ” படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும்.என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்று  பா இரஞ்சித்  கூறினார் .

Leave A Reply

Your email address will not be published.