பனையேறிகளின் வாழ்வியலை சொல்லும் படம் ‘நெடுமி’!

சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.

எப்படிக் காளைகளைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு இயக்கமாக வடிவெடுத்ததோ அதுபோல் நமது ஆதி பண்பாட்டின் தொடர்ச்சியாக நம் கண் முன் உயிர் சாட்சியாக நிற்கும் பனை மரங்களைக் காப்பாற்ற மக்கள் ஒன்றிணைய வேண்டியது கடமையாகிறது. ஊருக்கு ஊர் எல்லை காத்தான்களாக நின்று கொண்டு கற்பக விருட்சம் போலப் பலனைத்தரும் பனைமரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கருத்தைச் சொல்லாமல் சொல்லி வலியுறுத்துகிறது இந்தப் படம்.

இப்படத்தை நந்தா லக்ஷ்மன் எழுதியுள்ளார். ஏற்கெனவே இசை  ஆல்பங்கள், குறும்படங்கள் என்று இயக்கிய இவர், திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம்  இல்லாதவராக இருந்தாலும் பார்த்த படங்களிலிருந்தே பாடங்களை எடுத்துக்கொண்டு திரை நுட்பம் கற்றிருக்கிறார்.

கண் முன் கண்ட கதையையும் வாழ்வியலையும் மனதில் பதியம் போட்டு வைத்து இருந்ததைத் திரை நுட்பம் கலந்து நெடுமி படமாக உருவாக்கியுள்ளார். ஹரிஷ்வர் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எம். வேல்முருகன் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார் .நாயகியாக அபிநயா நடித்துள்ளார். இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே மாறி வாழ்ந்துள்ளார்கள். இவர்களுடன் இனைந்து இனை இயக்குநர் ஏ.ஆர்.ராஜேஷ் முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்கள் தவிர பிரீத்தி ரமேஷ்,  வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, நடித்துள்ளனர். உதவி இயக்குநர் தினேஷ் டேவிட், முரளிதரன் வெங்கடேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். குட்டிப் புலி படத்தில் வில்லனாக நடித்த ராஜசிம்மன் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர்தான் இயக்குநர் நந்தா லக்ஷ்மன். அந்த ஊருக்கு அருகில் உள்ள புதுப்பாக்கம் என்கிற கிராமம் கதைக்குப் பொருத்தமாக அமையவே முழு படத்தையும் அங்கேயே  முடித்துள்ளார்கள். கொரோனா காலத்தில்  கதை உருவாக்கி மெருகேற்றி 28 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளார்கள்.

மரமேறிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களது வலிகள் என்ன? பனை மரங்களின் பயன்கள் என்னென்ன? என்பதையெல்லாம் உணர்த்தும் வகையில் இந்தக் கதை உருவாகியுள்ளது.

படம் பற்றிய இயக்குநர் நந்தா லக்ஷ்மன் பேசும்போது,

“பனை மரங்களைச் சார்ந்து வாழ்க்கை நடத்திய 10 லட்சம் குடும்பங்கள் இன்று மிகவும் சிரமத்துக்குள்ளாகி சொல்ல முடியாத சோகத்தை நெஞ்சில் தேக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

அரசின் கள் இறக்கத் தடை சட்டத்தால் இவர்கள் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட  வலி அவர்களுக்குள் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வலியைத் திரைப்படத்தில் பதிவு செய்யும் முயற்சி தான் இது.சொல்லத் தயங்கி சொல்ல மறந்த அந்த வலியை நான் ஒரு படமாக எடுத்துள்ளேன். திருப்தியாக வந்துள்ளதாக நம்புகிறேன்.

இந்தப் படத்தைப் பத்து முறை நாங்கள் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காட்டினோம்.  படத்தைப் பற்றி பலரும் விமர்சித்தாலும் பல்வேறு கருத்துக்கள் சொன்னாலும் 80% பேர் படத்தில் ஓர்  உயிரோட்டம் உள்ளது என்று பாராட்டினார்கள். அந்தப் பாராட்டு தான் எங்களை முன்னகர்த்திக்கொண்டு செல்லும்  சக்தியாக இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து எடுத்திருக்கலாம், இன்னும் செலவு செய்து பிரமாண்டமாக எடுத்திருக்கலாம் என்று பலரும் பலவிதமாகச் சொன்னாலும், அந்த உயிரோட்டம் இருப்பதை அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். இதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை அளித்தது.ஒரு திரைப்படத்திற்கு தேவையானது அந்த நம்பிக்கைதானே?

சினிமா பற்றிய கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்கள் கரம் கோர்த்து ஒரு குழு முயற்சியாகத்தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதில் தனிநபர் யாரும் உரிமை  கொண்டாடாத அளவிற்கு கூட்டாக, குழுவாக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறோம் அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்கிறார் இயக்குநர்.

Leave A Reply

Your email address will not be published.