ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிடும் பிரபாஸின் 400 கோடி ரூபாய் பட்ஜெட் படம்!

‘கே ஜி எஃப்’ படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி’ படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய படைப்பு ‘சலார்’. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது

‘சலார்’ திரைப்படம் – இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட அதிரடி ஆக்சன் மற்றும் சாகசங்கள் நிறைந்த திரைப்படமாகும். இந்த படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், ‘சலார்’ படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

பான் இந்திய அளவிலான வெற்றியை சுவைத்திருக்கும் பிரபாஸ் நடிப்பில், எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் சலாரும் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முதன்முறையாக ஹோம்பாலே பிலிம்ஸ்,  ‘கே ஜி எஃப்’ இயக்குநர், ‘கே ஜி எஃப்’பில் பணியாற்றிய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸ் ஆகியோர் இணைந்து, இந்திய ரசிகர்களுக்கு உற்சாகமான படைப்பை வழங்க உள்ளனர். 2023 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும் திரைப்படமாக ‘சலார்’ அமையும்.

‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் அடுத்த ஆண்டில் சலாரை வெளியிட தயாராகி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி அன்று ‘சலார்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.