‘பனை’ தொழிலின் பெருமை பேசும் ‘சில்லாட்ட’ விரைவில் வெளிவருகிறது!

சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம், ‘சில்லாட்ட’. தென்னை மரத்தில் குலையுடன் ஒட்டி இருக்கும் வலையைப் போன்ற அமைப்புக் கொண்ட ‘பன்னாடை’ போன்றே,பனைமரத்தில் உள்ள ஓலைகளையும்  மட்டைகளையும்  தாங்கி நிற்கும் வலையைப் போன்ற சல்லடைக்கு பெயர் சில்லாட்ட.

‘சில்லாட்ட’ என்ற வழக்குச் சொல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில்  புழக்கத்தில் உள்ளதாகும். பெரும்பாலும் இதை வசைச் சொல்லாகவே பயன்படுத்துவார்கள்.

‘சில்லாட்ட’ பற்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகும் சிவராகுல்  கூறியதாவது….

‘அந்த காலத்தில் தண்ணீர், பதனீர் போன்ற திரவ பொருள்களை சல்லடை செய்வதற்கு இந்த சில்லாட்டயையே பயன் படுத்தினார்கள். காலபோக்கில் சில்லாட்டயையே மக்கள் மறந்து புதுவிதமான செற்கை சில்லாட்டைகளை உருவாக்கி விட்டார்கள்.

பனை தொழிலை அழித்து, ‘ சுருட்டு சுடலை’  செங்கல் சூலையை எழுப்பி தான் செய்யும் சமூகத்திற்கு விரோதமான தொழிலுக்கு பயன்படுத்துகிறார். இதனால் பனை தொழிலை செய்துவரும் ‘சரவணன்’ மற்றும்  பனை தொழிலையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதை சரவணன் எதிர்க்கிறான்.

சரவணன் மிகப்பெரிய இடைஞ்சலாக இருப்பது சுருட்டு சுடலைக்கு தெரிய வருகிறது . இதனால் சரவணனை போட்டுத்தள்ள  சுருட்டு சுடலை களத்தில் குதிக்கிறான். அதேநேரத்தில் தனது பனைதொழிலை  மீட்பதற்கு சரவணன் களத்தில் குதிக்கிறான்.

இறுதியில் வெற்றிபெற்றது யார்? என்பதை கிராமிய சூழலில் படமாக்கி இருக்கிறேன்”.என்று கூறினார்.

‘சில்லாட்ட’ படத்தில் சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார். இதில் டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் அவருக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோருடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுருட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

தென் தமிழகத்தில் வளர்ந்துள்ள “சில்லாட்ட” விரைவில் திரைக்கு வர உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.