‘சிவகுமாரின் சபதம்’ : விமர்சனம்

SathyaJyothi Films, Indie Rebels நிறுவனங்கள் சார்பாக செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆகியோரின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், ‘சிவகுமாரின் சபதம்’.

ஆதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக மாதுரி நடித்துள்ளார். இவர்களுடன் இளங்கோ குமணன், ஆதித்யா டிவி கதிர், பிரபல யூடியூப் ப்ராங்க்ஸ்டர் ராகுல், விஜய் கார்த்திக், ரஞ்சனா நாச்சியார், கோபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒரு டீசன்டான ஓப்பனிங்குடன் வெளியாகியுள்ள ‘சிவகுமாரின் சபதம்’ எப்படியிருக்கிறது?

பரம்பரை, பரம்பரையாக பட்டு கை நெசவுத்தொழிலில் மிக நுண்ணிய, நுணுக்கமான வேலைகளை செய்வதில் மிகத் திறமையானவர் சிவக்குமாரின் (ஆதி)  தாத்தா வரதராஜன் ( இளங்கோ குமணன் ). பிரத்யேகமாக ராஜாக்களுக்கும், வெள்ளைக்காரர்களுக்கும் பட்டுச்சேலைகளை நெய்து கொடுத்து வருகிறார்.

வரதராஜனுக்கு ( இளங்கோ குமணன் ) வலது கையாக இருந்துவரும் சந்திரசேகர் (விஜய் கார்த்திக்), அவருக்கு ஒரு துரோகத்தை செய்துவிடுகிறார். அதன் காரணமாக வரதராஜன் தன்னுடைய கை நெசவுத்தொழில் கூடத்தை மூடி விட்டு ஒரு சபதம் செய்கிறார். அவர் என்ன சபதம் செய்தார்? ஏன் செய்தார்? என்பது தான் படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் படம் முழுவதும் ஃபுல் எனர்ஜெடிக் யங் மேனாக வருகிறார், ஹிப் ஹாப் ஆதி. ஆட்டம், பாட்டம் எதிலும் குறைவில்லை! சண்டைக்காட்சியிலும் (பப்பில் நடக்கும்) ரசிக்க வைக்கிறார். மேனரிசமாக தன்னுடைய ஷோல்டரை ஆட்டிக்கொண்டே டயலாக் பேசும் காட்சியில் பெண்களை கவர்கிறார் துரு துரு ஆதி.

 

நாயகியாக நடித்திருக்கும் மாதுரி அழகாக இருக்கிறார். பாடல்களில் அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம். முதல் பகுதியிலேயே 4 பாட்டு எல்லா பாட்டுமே கும்பலிங்ஸ் பாட்டுத்தான். கும்பலா ஆடி,பாடுறதுக்கு எதுக்கு ஹீரோயின்?

அதேபோல் ‘மியா கலிஃபா’வின் மினியேச்சர் விஜே பார்வதியை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம். சில காட்சிகள் நடித்திருந்தாலும், நன்றாக நடித்திருக்கிறார்!

ஆதித்யா டிவி – கதிர் சில இடங்களில் வெடிச்சிரிப்பை ஏற்படுத்துகிறார். குறிப்பாக ‘ரெஸ்டாரண்டில் ரௌடிகள் அடிக்கவரும் காட்சியில், ஆதியிடம் சைகை மூலம் செய்து காட்டுவதை சொல்லலாம்! சபாஷ் கதிர். அப்படியே ரூட்டை பிடிச்சுக்கோங்க.

பிராங்ஸ்டர் ராகுல் பரவாயில்லை!

டெக்னிக்கல் சைடில் கேமரமேன் அருண்ராஜா குறிப்பிடத் தகுந்தவர்.

மாதுரி, ஆதித்யா டிவி – கதிர், விஜே- பார்வதி,  ரஞ்சனா நாச்சியார் இவர்கள் கதாபாத்திரம் தவிர்த்து, இந்தப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை அரை லூசாக வடிவைத்திருப்பது ஏன் என தெரியவில்லை?

கம்பீரமாக சொல்லவேண்டிய வரதராஜனின் மெயின் கதாபாத்திரத்தையும் கெடுத்து, இந்த மொத்த லூசு குடும்பத்திற்கும் தலைவராக, இளங்கோ குமணனின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றம்.

கம்பீரமாக செய்ய வேண்டிய சிவகுமாரின் சபதம், ‘சப்பாணியின் சபதம்’  ஆக உருவாக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.