‘ஷட்டர்’ படத்தின் ரீமேக்! மீண்டும்?  ‘சிவி’ 2 பாகம்.

பழம்பெரும் நடிகர் ‘தேங்காய்’ சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி சீனிவாசன், அனுஜா ஐயர் ஆகியோர் நடித்து, கடந்த 2007ல் வெளிவந்த படம் ‘சிவி’. இப்படம் 2004 ஆம் ஆண்டு தாய்லாந்து மொழியில் வெளியான ‘ஷட்டர்’ படத்தின் மறு உருவாக்கம்.

சிறிய அளவிலான பட்ஜெட்டில் உருவான ‘சிவி’ வெளியான போது குறிப்பிட்ட அளவு கவனம் பெற்றது. இதைதொடர்ந்து இந்தப்படத்தின் 2 ஆம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.

‘துளசி சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி -2 திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள். இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். அங்கு போனவர்கள் ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்.

இதனால், காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார்,  ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.  என்ன நடந்தது என்பதை திரைக்கதையின் மூலம் விறுவிறுப்பு குறையாமல் சிவி 2 படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.