சன்னி லியோன் நடிக்கும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் நிறைவு!

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’  படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை படத்தின் கதையின் நாயகியான நடிகை சன்னிலியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,’ ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில்  உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.

விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார். மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நடிகை சன்னி லியோனின் கடுமையான உழைப்பு குறித்து குறிப்பிடாமல் இருக்க இயலாது. படப்பிடிப்பு நிறைவடைந்த போது ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது.’ என்றார்.

இதுதொடர்பாக நடிகை சன்னி லியோன் பேசுகையில்,’ ஷெரோ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இந்தப் படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது. கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.’ என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்தது என்பதை  குறிப்பிடும் வகையில் கதையின் நாயகியான நடிகை சன்னி லியோனும், இயக்குனர் ஸ்ரீஜித் விஜயனும் கையில் கிளாப் போர்டு ஒன்றை வைத்துக்கொண்டு அதில் படப்பிடிப்பு நிறைவு என குறிப்பிட்டு, அதை புகைப்படமாக எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.