நாகசைதன்யா –  வெங்கட்பிரபு  இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு  தொடக்கம்!

இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

‘NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது    குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் படத்தின் பூஜையின் போது படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இளைஞர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி, இந்தப் படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ’மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். இவர்கள் இருவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருப்பதோடு, படத்திற்கும் முக்கிய பலமாக இருக்கும்.

இப்படி பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படத்தின் முக்கிய அப்டேட்டாக நாளையில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது என படக்குழு அறிவித்திருக்கிறது.

இது குறித்து படக்குழு தெரிவித்திருப்பதாவது, ‘அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் ஆசியுடன் எங்களின் முக்கிய படைப்பான நடிகர் நாகசைதன்யா- இயக்குநர் வெங்கட்பிரபு இணையும் படத்தின் படப்பிடிப்பு நாளையில் இருந்து தொடங்குகிறது என தெரிவித்து கொள்கிறோம்’ என படத்தின் புதிய போஸ்டருடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த போஸ்டரில் நாகசைதன்யாவின் படம் தொடர்பான எந்தவொரு லுக்கும் வெளியாகவில்லை. நாகசைதன்யா நின்று கொண்டிருக்கும்படி அவரது நிழல் உருவம் இருக்க அவரை நோக்கி பல ரெட் டார்கெட்டுகள் இருக்கும்படி கருப்பு- சிவப்பு வண்ணத்தில் வைப்ரண்ட்டாக இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். இந்த படத்தை பவன்குமார் வழங்க உள்ளார். திறமையான, பிரபலமான பல நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்ற உள்ளனர். அபூரி ரவி இந்தப் படத்தின் வசனகர்த்தாவாக பணியாற்ற உள்ளார். மற்ற விவரங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியிடப்படும்.

Leave A Reply

Your email address will not be published.