நெஞ்சுக்கு நீதி – விமர்சனம்!

இந்தி மொழியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்டிகள் 15. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார்.

நெஞ்சுக்கு நீதி  படத்தினை  ‘ரோமியா பிக்சர்ஸ்’ சார்பில் ராகுல் தயாரித்துள்ளார். போனி கபூரின்  ‘பே வியூ புரோஜக்ட்’, ‘ஜீ ஸ்டுடியோ’ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகியுள்ளது. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன்,  சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம்.

ஒரு கிராமத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டன்ட் ஆக பணி ஏற்க வருகிறார், உதயநிதி ஸ்டாலின். பதவி ஏற்ற நாளிலிருந்து அந்த கிராமத்தில் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் போலீஸாரின் அலட்சியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.

அந்த சம்பவங்களில் ஒன்று தாழ்த்தப்பட்ட சாதியினை சேர்ந்த 3 சிறுமிகள் காணாமல் போன வழக்கு. அதில் இருவர் தூக்கிலிடப்பட்ட நிலையில், இன்னொருவரின் நிலை மர்மமாக இருக்கிறது. இதை போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சக்கர்வர்த்தி மீடி மறைக்கிறார்.. இதனால் உதயநிதி ஸ்டாலின் அந்த வழக்கை தனது நேரடி பார்வையில் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த 3 சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கவைக்கிறது. அவர் இதுவரை நடித்த படங்களில் நடித்ததை விட இந்தப்படத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார். பல காட்சிகளில் அவர் பேசும் வீரியமான வசனங்கள் தியேட்டர்களில் கைதட்டலை பெறுகிறது.

உதயநிதியின் மனைவியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாரால் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட ஆரி இருவருடைய கதாபாத்திரமும் திரைக்கதைக்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கிறது.

போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி,  சிறப்பாக நடித்து இருக்கிறார். கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்துள்ளார். அட்டகாசமான நடிப்பு. மற்றபடி சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் இளவரசு, ஷிவானி ராஜசேகர், மயில்சாமி உள்ளிட்டோர் கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே உள்ள ஏற்ற தாழ்வு எந்தவித சமரசமும் இல்லாமல் சுட்டிக்காட்டிய இயக்குனர் பாராட்டத்தக்கவர்.

மேலும் எந்த சாதியினையும் உயர்த்திப்பிடிக்காமல் சமரசமின்றி திரைக்கதை அமைத்திருப்பதும்  இப்படத்தின் வெற்றி.

திபு நினன் தாமஸின் இசை மற்றும் தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.

பெரிதாக கமர்ஷியல் அயிட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் படம் முழுவதிலும் ஒரு பரபரப்பும் சுவாரஸ்யமும் இருக்கிறது. இரண்டாவது பகுதியில் சற்று தொய்வு ஏற்படுத்துவதை தவிர்த்து இருக்கலாம்.

மேலும் இது ஒரு இந்தி படத்தின் ரீமேக் என்ற சாயல் எந்த இடத்திலும் வரவில்லை. இதற்காக அருண்ராஜா காமராஜை பாராட்டலாம்.

நெஞ்சுக்கு நீதி  –  எல்லோரும் பார்க்கவேண்டிய படம்!

Leave A Reply

Your email address will not be published.