Connect with us

Cinema News

படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பது பார்வையாளனின் உரிமை! – தங்கர் பச்சான்

Published

on

 அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான். திரைப்படங்களை மய்யமாகக் கொண்டே இயங்கும் தொலைகாட்சி, நாளிதழ், வார இதழ், இணையத்தள ஊடகங்கள் அனைத்தும் எப்பொழுதும் இல்லாத அளவில் சுறுசுறுப்போடு இயங்குகின்றன.

தனது மொழிகளில் உள்ள திரைப்படங்களைத்தவிர பிறமொழிப்படங்களைக் கண்டிராத மக்களெல்லாம் உறங்கும் நேரம் தவிர இவைகளை மட்டுமே  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஆண்டு முழுக்கக் காண வேண்டிய திரைப்படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் பார்த்து முடிந்தது.

திரைப்பட செய்திகளைக் கேள்விப்படுவதும், சுவரொட்டி விளம்பரங்களை காண்பதுமே வாழ்வின் பெருமகிழ்ச்சியாக இருந்த காலங்கள் ஒழிந்து விட்டன. முப்பது பைசா கட்டணமாகக் கொடுத்து திரைப்படம் பார்த்த எனக்கு  கைக்குள்ளேயே இருக்கும் கைப்பேசிக்குள் உலகத்தின் எல்லா நாடுகளிலும் உருவாக்கப்பட்ட திரைப்படங்களையெல்லாம் நினைத்த நேரத்திலெல்லாம் பார்த்துக்கொள்ளலாம் எனும் வசதியை  அறிவியல் அமைத்துத் தந்திருக்கிறது.

உலகம் முழுமையிலும் 1,37,000 திரையரங்குகள் உள்ளன. திரையரங்குகளின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம், இந்தியா மூன்றாமிடம். அமெரிக்காவில் மட்டும் ஏறக்குறைய  40,000 திரைகள் கொண்ட அரங்கங்கள்  உள்ளன. மக்கள் தொகையில் அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிகம் கொண்ட நம்நாட்டில் 11,000 திரைகள் கொண்ட அரங்குகள்  மட்டுமே உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு திரையரங்கைக் கொண்ட செனகல் எனும்  தனி நாடான தீவும் இருக்கின்றது. உலகிலேயே திரைப்படம் பார்க்க மிகக்குறைந்த கட்டணம் கொண்ட நாடு இந்தியாதான் எனும் செய்தியையும் அறிய முடிகிறது.

கொரோனாவின் தாக்குதலிலிருந்து இவையெல்லாம் இனி தப்பிக்குமா எனப் பட்டியலிடும் பொழுது திரையரங்கங்களும், அச்சு ஊடகங்களும் முதலில் நிற்கின்றன. 5 கோடியிலிருந்து 2500 கோடிகள் வரை செலவழித்து உருவாக்கிய  அமெரிக்கத் திரைப்படங்கள்கூட எப்பொழுது திரைக்கு வரும் எனத்தெரியாமல் முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்கிருமியிலிருந்து மீள மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடித்து அதை  அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி பலன் கண்டபின்தான் அனைத்திற்கும் தீர்வு. இன்றைக்கு மருந்து கண்டுபிடித்தாலே  நடைமுறைக்கு வர ஓராண்டு, இரண்டாண்டு ஆகலாம் என ஆளாளுக்குச் சொல்கிறார்கள். திரைப்படங்களை தயாரிப்பவர்கள் மட்டும் திரைப்படத்தொழிலில் முதலீட்டாளர்கள் இல்லை. திரையரங்கு உரிமையாளர்களும்தான். மக்களுக்கு நம்பிக்கை  உருவாகி திரையரங்கில் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க முன்வரும்வரைக்கும் திரையரங்குகள் காத்திருக்கத்தான் வேண்டும்.

தங்கர் பச்சான்

ஆனால் முடித்து தயார் நிலையிலுள்ள திரைப்படங்கள் அதுவரைத் திரையரங்குகளுக்கு காத்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவரை  மக்கள் காத்திருக்க மாட்டார்கள்!. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் எதோ ஒரு வடிவில் காணக்கிடைக்கின்ற திரைப்படங்கள்தான். அவற்றை எந்த வடிவத்தில் எந்த கருவிகளில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல என நினைக்கிறார்கள். இனி வரும் காலங்களில் உயிர்வாழவே பணத்திற்கு அலையப்போகும் மக்களுக்கு இவ்வாறு வீட்டுக்குள்ளேயே திரைப்படங்களை பார்ப்பதால் பெரும் பணம் மிச்சம். ஒரு குடும்பம் ஒரு படத்துக்கு செலவழிக்கும் தொகையில் சில ஆண்டுகள் முழுக்க நினைத்த இடத்தில், மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி… இப்படி தங்களின் வசதிக்கேற்ப குடும்பமே எப்பொழுது  வேண்டுமானாலும்  பார்க்கலாம். இதுபோக இதனால்  நேரம் மிச்சம், அலைச்சல் மிச்சம், சுகாதாரச் சீர்கேட்டிலிருந்து விடுதலை, தின்பண்டங்கள், வாகன நிறுத்தக்கட்டணம் போன்ற இந்த செலவுகளிலிருந்தும் விடுதலை. இதுபோக எரிபொருள் மிச்சம் என  இப்படிப்பட்ட எண்ணற்ற  பலன்களை அனுபவித்துவிட்டதால் இதுவே பின்னர்  பழக்கமாகவும் ஆகிவிடலாம். இதனால் முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்கு செலவழித்தத் தொகை கிடைக்குமா என்றால்! கட்டாயம் அதற்கு மேலும் கிடைக்கும் என ஹாலிவுட் தயாரிப்பாளர்களே கூறுகிறார்கள். திரையரங்கில் பார்க்கும் பார்வையாளர்களைவிட மின்திரையில் (Amazon,Netflix, etc..&Television) பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு கூடிவிட்டதாம். இதற்கு காரணம் திரையரங்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டவர்கள்

எல்லோரும்  மீண்டும் பார்க்கத் தொடங்கி விட்டனர். இந்தியா போன்ற பல மொழிகளில், அவர்களுக்கான மொழியில் தயாரிக்கின்ற திரைப்படங்கள் எல்லாம் இன்று ஆங்கில துணை எழுத்துக்களுடன் (Sub-Titles) உலகத்திலுள்ள மக்கள் அனைவராலும் பார்க்க முடிகிறது.

கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருந்தால் தமிழ்த்திரைப்படங்களும் உலக மக்கள் அனைவராலும் கவனிக்கப்படும். கடந்த ஆண்டில் தமிழில் வெளியான “Tolet” எனும்  திரைப்படம் உலகம் முழுக்க அதிகப் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டிருப்பதை அறிகிறேன். இந்தப்படம் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய சிக்கலையும், தனிப்பட்ட கலாச்சாரங்களையும்  பதிவு செய்ததால் மட்டுமே இது நிகழ்ந்திருக்கின்றது. அதே நேரத்தில் கதாநாயகர்களை மூலதனமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டப் படங்கள் எல்லாம் தமிழர்கள் மற்றும் அதையும் தாண்டி மிகச்சிறிய அளவில் இந்தியர்களால் மட்டுமே  பார்க்கப்பட்டன.

 வீட்டுக்குள் வந்துவிட்ட மின்திரை ஊடகங்கள் திரைப்படப் பார்வையாளர்களின் திரைப்படம் குறித்த பார்வையை மாற்றியிருக்கின்றன. சுவையைக் கூட்டியிருக்கின்றன. கதை என்றால் கதாநாயகர்களை முன்னிறுத்தித்தான் உருவாக்க வேண்டும், கதாநாயகிகள் களிப்பூட்டுபவர்களாக, கவர்சிகரமான தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் எனும் காலங்காலமாக உருவாக்கி வைத்திருந்த விதிகளை உடைத்திருக்கின்றன. இனி கதாநாயக வழிபாடும், கற்பனை  பிம்பங்களும் உடைந்து போகும். திரைப்படங்கள் இதுவரை பேசாமல் ஒதுக்கி வைத்திருந்த அனைத்தையும் பேசும்.

இந்த மாற்றங்கள்  மற்ற மொழிகளில், நாடுகளில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பே  வரத்தொடங்கிவிட்டன. முப்பது வயதாகிவிட்டப் பெண்களை கதாநாயகியாக்க, முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கவைக்க முன்வர மாட்டார்கள் என்பதெல்லாம் இனி இல்லாமல் போகும். உலகில் தமிழ் மொழி மற்றும் சில மொழிகளைத் தவிர்த்து அனைத்திலும் பாதிக்கு மேற்பட்டப் படங்கள் எப்பொழுதோ பெண்களை மய்யமாகக்கொண்டப் படங்களாக மாறிவிட்டன.

ஒரு கதாநாயகனை முன்வைத்து மாபெரும் வெற்றிப்படத்தை 25 இலட்சம் பேர்கள் இதுவரைப் பார்த்தார்கள் என்றால் யாரென்றே முன்பின் அறியாத புதுநடிகர்களைக் கொண்ட திரைப்படங்களை ஒரு கோடி பேருக்குமேல் உலகம் முழுவதிலும் இருந்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாட்டிலும் டிசம்பரிலேயே வெளியாக வேண்டியிருக்க படங்கள் ஆயிரக்கணக்கில் முடங்கிக்கிடக்கின்றன. 1500 கோடிகளிலிருந்து 2500 கோடி வரை செலவழிக்கப்பட்டப் படங்கள்கூட திரையரங்குகள் செயல்படும் நாளுக்காக காத்திருக்காமல் மின்திரையின் மூலமாக மக்களை சென்றடைவதற்கான திட்டங்களை ஆராயத்தொடக்கிவிட்டன எனும் செய்திகளை இணையங்களில் காண முடிகிறது.

திரைப்படக்கலை அனைத்து கலைகளையும் உள்ளடக்கி செயல்படத்தொடங்கிவிட்டதால் மக்கள் அதை எப்போதும் இழக்க மாட்டார்கள். திரைப்படக்கலை அழிந்துபோகும் என கவலைகொள்ள வேண்டியதில்லை. அதன் வடிவம்தான் மாறிக்கொண்டேயிருக்கும்!

எவ்வாறு பேசாதப்படங்கள் பேசும் படங்களாக மாறியதோ, எவ்வாறு கருப்பு வெள்ளை படங்கள் வண்ணப்படங்களாக மாறியதோ, படம் இயக்கும்  கருவிகள் ஆளில்லாத முறைக்கு மாறியதோ, படச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் சிறிய மின்விசை கேமிராக்களில் உருவாக்கப்படுகிறதோ அதேபோல் திரையரங்குகளில் மட்டும் இருந்த  சினிமா மின்திரைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது  என்பதுதான் மறுக்க முடியாத  உண்மை. திரைப்படம் என்பது ஒலி,ஒளி,காட்சிகளின் தனித்துவ சிறப்புத்தன்மை இவைகளின் மூலம் உருவாக்கப்படும் ஒவ்வொருவரின் கற்பனைகளையெல்லாம் கடந்த வித்தைக்கலை. சில படங்கள் தரும் அனுபவத்தை திரையரங்குகளில் மட்டுமே பெற முடியும்.  அந்த அனுபவத்தை அடைய விரும்பும் மக்கள் தொடர்ந்து திரைப்படங்களை திரையரங்கில் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள். 40,000 அரங்குகளைக்கொண்ட அமெரிக்காவில்தான் வீட்டிற்குள்ளேயே மின்திரையில் அதிகப்படியானவர்கள் திரைப்படத்தை பார்க்கிறார்கள் எனும் உண்மையையும் உணர வேண்டும். எந்தப்படத்தை எங்கே காணலாம் என முடிவெடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் பார்வையாளனின் உரிமை!  அறிவியல் திரைப்படத்தை காற்றில் பார்க்கும் காலத்திற்கும் அழைத்துக்கொண்டு போகலாம். அதையும் நம்மால் தவிர்க்க இயலாது.

Advertisement

Cinema News

’கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்!

Published

on

By

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் இசையமைக்க, பவன் கவுடா படத்தொகுப்பு செய்கிறார். சசி தூரி தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க, ஹஸ்வத் சரவணன் பி.ஆர்.ஓ பணியை கவனிக்கிறார்.

க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு போஸ்டரை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார். அதேபோல், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட, சமூக வலைதளங்களில் வைரலானதோடு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், ‘கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், டிசம்பர் 5 ஆம் தேதி மாலை 6.06 மணிக்கு வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்கள் வெளியிட்டு வைரலாக்கிய நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் அதிகப்படங்களின் நடிக்கும் நாயகனாக உருவெடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளாதால் ‘கிரிமினல்’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Continue Reading

Cinema News

“என்ன சொல்ல போகிறாய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !

Published

on

By

Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் தயாரிப்பில், குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் நாயகனாக நடிக்கும், A.ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், “என்ன சொல்ல போகிறாய்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா , ரசிகர்களின் முன்னிலையில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  Trident Arts நிறுவன தயாரிப்பாளர்  R.ரவீந்திரன் பேசியதாவது…

இந்தப்படம் பத்தி கலைஞர்கள் தான் பேசனும் . 500 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ளேன். நிறைய படங்கள் தயாரித்துள்ளேன். இந்தப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம்.  முழுக்க புதுமுகங்களை இந்தப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறேன். படக்குழுவிலேயே நான் தான் வயதானவன். படம் இளைஞர்கள் கொண்டாடும் படமாக வந்திருக்கிறது, படத்திற்கு  ஆதரவு தாருங்கள் நன்றி.

நாயகி அவந்திகா பேசியதாவது…

இந்தப்பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. நடிகையாக வரவேண்டும் என்பது எனது கனவு. அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இப்படத்தில் வேலை  செய்தது மறக்க முடியாத அனுபவம். அஷ்வின் எனக்கு மிகச்சிறந்த ஒத்துழைப்பு தந்தார். பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படமும் உங்களுக்கு பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி

நாயகி தேஜஸ்வினி பேசியதாவது…

அஷ்வின் பீப்பிள்ஸ் லவ் என டிவிட் செய்வதன் அர்த்தம் இப்போது தான் அர்த்தம் தெரிகிறது. எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. ஹரிஹரன் ஒவ்வொரு விசயமும் சொல்லிக்கொடுத்து செய்ய வைத்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. இந்தப்படக்குழுவே மிக கடுமையாக உழைத்திருக்கிறது. முதன் முதலாக பெரிய படம் செய்திருக்கிறோம் உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் புகழ் பேசியதாவது…

உயரத்துக்கு ஏணியா இருக்கும் என்னோட பேன்ஸுக்கு நன்றி.  ரவி சார் ஆபீஸ் கூப்பிட்டு செக் கொடுத்து, படம் செய்கிறாய் என்று சொன்னார். அதற்கப்புறம் 5 மாதம் கூப்பிடவில்லை. அப்புறமாக அஷ்வின் நாயகன் என்றார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் இது என் 7 வருட உழைப்பு, தயவு செய்து காமெடி பண்ணி கெடுத்து விடாதீர்கள் என கெஞ்சி கேட்டார் அதனால் நான் எதுவும் காமெடி செய்யவில்லை. படத்தை செய்தது ஜாலியாக இருந்தது. இப்படத்தில் பாடல்கள் எல்லாமே பயங்கர ஹிட்டாகிவிட்டது படம் கண்டிப்பாக வெற்றி பெறும் அனைவருக்கும் நன்றி.

நாயகன் அஷ்வின் குமார் லக்‌ஷ்மிகாந்தன் பேசியதாவது…

ரசிகர்களாகிய உங்கள் அன்பால் தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்பு தான் என்னை வளர்த்துள்ளது. இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை உங்கள் அன்பால் தான் இது சாத்தியமாகியிருக்கிறது.

எனது முதல் படம் இன்று இசை விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் உங்கள் இடத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப்படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நல்ல நண்பன் இருந்தால் உங்கள் வாழ்வு கண்டிப்பாக சிறப்பாக இருக்கும்.

ரவி சார் யாராயிருந்தாலும் அவர் ஆபீஸில் சாப்பாடு போடுவார் அவர் ஆபீஸில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். நல்ல மனிதர் அவர், முதலில் அவர் சொன்ன கதையை செய்ய மாட்டேன் என சொல்லி விட்டேன். பெரிய நிறுவனத்தை மறுத்து விட்டோம் என வருத்தமாக இருந்தது. நீங்கள் என் மேல் அன்பு வைத்து என்னை பார்க்க வருகிறீர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். நான் கதை கேட்கும்போது நல்லாயில்லனா தூங்கி விடுவேன். 40 கதைக்கும் மேல் நான் தூங்கியிருக்கேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை என்ன சொல்ல போகிறாய் தான். ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறார். இசையமைப்பாளர் விவேக் மெர்வின் அட்டகாசமான இசையை தந்திருக்கிறார்கள். நாயகிகள் இருவருமே மிகுந்த நட்புடன் நடித்து தந்தார்கள். படம் பார்க்க பிரமாண்டமாக வந்திருக்கிறது. புகழ் இந்தப்படத்தில் அழகாக இருக்கிறார். எனக்கு சினிமாவில் ரெண்டு பேரை பிடிக்கும் சூப்பர் ஸ்டார். அப்புறம் சிம்பு சார். அவர் போன் செய்து என்னை வாழ்த்தினார் அவருக்கு நன்றி. சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய இன்ஷ்பிரேஷானாக இருந்திருக்கிறார். அவரை நினைத்து தான் என் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருக்கிறேன். என்ன சொல்லப் போகிறாய் படத்தை நீங்கள் பார்த்து கொண்டாடுவதை காண ஆவலாக இருக்கிறேன். இந்தப்படம் பல பேரின் கனவு கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன் நன்றி.

இயக்குநர்  A.ஹரிஹரன் கூறியதாவது…

ஒரு விசயம் உங்களுக்கு பிடிச்சிருந்தா இந்த உலகமே இணைந்து செஞ்சு கொடுக்கும்னு சொல்லுவாங்க.. அது எனக்கு இப்போ நடந்திருக்கு. ரொமான்ஸ் படம் செய்யனும்னா தயாரிப்பாளருக்கும் ரொமான்ஸ் பிடிச்சிருக்கனும். ரவி சார் மிகவும் ரொமான்ஸ் ஆனவர் அது எனக்கு வரம். விவேக் மெர்வின் இந்த முழுப்படத்தின் பாடல்களையும் ஹிட் செய்து கொடுத்து விட்டார்கள். புகழ் கேரக்டரில் முதலில் விவேக் சார் நடிக்க வேண்டியது,  ஆனால் புகழ் அட்டகாசமாக செய்து கொடுத்தார். தேஜுவுக்கு முன் நிறைய பேரை தேடிக்கொண்டிருந்தேன் இறுதியாக தான் அவர் உள்ளே வந்தார் நன்றாக செய்துள்ளார். அவந்திகாவும் நன்றாக நடித்துள்ளார். அஷ்வினுக்கு இருக்கும் ரசிகர்களை பார்க்கும்போது ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படமெடுப்பது  போல் உள்ளது. அஷ்வின் புகழ் காம்போ இப்படத்தில் சூப்பராக இருக்கும். இந்தப்படத்தில் எல்லாமே ரொம்ப லவ்லியாக இருந்தது, உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். டிசம்பர் 24 படம் ரிலீஸ் ஆகிறது உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி.

 

Continue Reading

Cinema News

‘தங்க மீன்கள்’ சாதனா உருவாக்கிய ‘கண்ணும் கண்ணும்’ பாடலின் மறு உருவாக்கம்!

Published

on

By

‘தங்க மீன்கள்’ படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்ற சாதனா, பின்னர் ராம் இயக்கிய விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘பேரன்பு’ படத்தில் மெகாஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்தார்.

முறையாக பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தற்போது சரிகம தமிழ் யூடியூப் சேனலுக்காக ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணும் கண்ணும்’ பாடலை மீண்டும் உருவாக்கியுள்ளார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலும், அதற்கு இடையே வரும் ‘சபாஷ் சரியானப் போட்டி’ என்ற வசனமும் இறவாப் புகழ் பெற்றவையாகும். சி ராமச்சந்திரா இசையமைப்பில், கொத்தமங்கலம் சுப்பு பாடல் வரிகளில் பி லீலா, ஜிக்கி ஆகியோர் பாடி பத்மினி, வைஜெயந்திமாலா பாலி நடனமாடியிருந்த இப்பாடலை யாரும் மறக்க முடியாது.

இப்பாடலின் மறு உருவாக்க வீடியோவில், பத்மினி மற்றும் வைஜெயந்திமாலா பாலி ஆகிய இரு வேடங்களிலும் சாதனா நடனமாடியுள்ளார், இதுவரை யாரும் செய்யாத முயற்சி இதுவாகும்.

பிரபல வீணை மேஸ்ட்ரோ ராஜேஷ் வைத்யா ரீமாஸ்டர் செய்துள்ள இப்பாடலை சரிகமா வெளியிட்டுள்ளது. ஒளிப்பதிவை விஜய் தீபக் கையாண்டுள்ளார், சிஜி விஎஃப்எக்ஸ் காட்சிகளை நாகராஜன் சக்திவேல் வடிவமைத்துள்ளார். இந்த வீடியோவை சாதனாவே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல் சரிகமா தமிழ் யூடியூப் சேனல் மற்றும் பிற ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத பாடலுக்கு செய்யப்படும் பொருத்தமான மரியாதையாக புதிய பதிப்பு அமைந்துள்ளது. இதன் மூலம் சாதனா மிகப்பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

Copyright © 2021 Chennai Editor. Designed by Trendsz Up.