தமிழர்களே சிந்தியுங்கள்! – தங்கர் பச்சான் குமுறல்!

இந்தித்திணிப்பின் போது இணையத்தளங்களில் மட்டும் தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப்பற்றினை பறை சாற்றிக்கொள்வோம். தமிழில் கல்வி வேண்டாம்,ஆலயங்களில் தமிழ் வேண்டாம்,நீதி மன்றங்களில் தமிழ் வேண்டாம்,திருமண அழைப்பிதழ்களில் தமிழ் வேண்டாம்,நாளேடுகளில் தமிழ் வேண்டாம்,வீட்டுக்குள்ளேயே தமிழ் வேண்டாம்,பொது இடங்களில் தமிழ் வேண்டாம்,கடைகள்,வணிக நிறுவனங்கள் என எங்கும் எதிலும் தமிழ் வேண்டாம். ஆனால் தமிழ் தான் எங்கள் உயிர் என கூறிக்கொள்வோம்.

குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவருமே தாங்கள் பேசுவது தமிழ்தானா என புரிந்து பேச மாட்டோம். தொடர்ந்து நான்கு தமிழ் சொற்களை இணைத்து பேசத்தெரியாது. ஒரே tention . எங்கே meet பண்ணலாம். கொஞ்சம் wait பண்ணு. நான் try பண்றேன். அது வரைக்கும் என்ன disturb பண்ணாத. என் familyகிட்ட cousult பண்ணிட்டு சொல்றேன்.நீ கொஞ்சம் help பண்ணினா immediate டா வரேன். Okay வா. call பண்ணு. இவ்வாறு தான் இன்று பெரும்பாலான தமிழர்களின் நாக்கு உச்சரிக்கின்றன. தூய தமிழில் எவராவது பேசினால் வேற்று கோள்களிலிருந்து இறங்கி வந்தவர்களை பார்ப்பது போல் தான் பார்ப்போம்.

மூன்று  இலட்சம் அளவில் சொற்களைக்கொண்ட தமிழ்க்களஞ்சியத்தில் இருந்து சாகும் வரை ஐம்பது சொற்களைக்கூட கையாளத்தெறியாத ஒரு  இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமயம் (நிமிடம்) கூட பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ,நான்கு வரிகள் அதே போல பிழை இன்றி எழுதவோ முடிவதில்லை. ஆனால் எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களை பெருமையாக மேற்கோள் காண்பித்து தமிழை ஓசையில்லாமல் அழித்துக்கொண்டு தமிழ்நாடு என பெயரிட்ட மாநிலத்தில் தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும்  குற்ற உணர்வின்றி  வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

தமிழ் வாழ்கிறதா! வளர்கிறதா! கொல்லப்படுகிறதா! தமிழர்களாகிய நாம் தான் சிந்திக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.