ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்!

Labyrinth film productions நிறுவனம் தயாரித்துள்ள ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தினை இயக்கியிருப்பவர், தெலுங்கு பட இயக்குநர் மனோஜ் பீதா. இதில் சந்தானம், ரியா சுமன் இருவரும் இணைந்து நடித்திருக்க, இவர்களுடன் ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், E.ராமதாஸ், ‘அருவி’மதன், ஆதிரா, இந்துமதி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’படத்தின் தமிழ் ரீமேக்’ தான் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’. எப்படி இருக்கிறது?

தன்னுடைய அம்மா இந்துமதியின் இறுதி சடங்கிற்காக தனது சொந்த கிராமத்திற்கு செல்கிறார், சந்தானம். ஆனால் அவரால் அந்த இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. குற்ற உணர்ச்சியால் குறுகி நிற்கிறார்.

இந்நிலையில், அவரது கிராமத்துக்கு அருகில் இருக்கும் ரயில்வே தண்டவாளங்களின் ஓரத்தில் பிணங்கள் அவ்வப்போது காணப்படுகிறது. இந்த பிணங்கள் யாரால், எதற்கு இங்கு போடப்படுகின்றன? என்ற மர்மத்தை கண்டுபிடிக்க சந்தானம் களத்தில் இறங்குகிறார். இதுவே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் கதை.

படம் முழுவதும் சந்தானம் தோற்றப்பொலிவு நலிவுற்ற நிலையில் காட்சி தருகிறார். உற்சாகமான சந்தானத்தை பார்த்து…. பார்த்து… ரசித்த ரசிகர்களுக்கு, உற்சாகமற்ற சந்தானத்தை பார்ப்பது சோகமே!  ‘குளு குளு’ படத்தின் மூலம் அவருடைய பெரும்பாலான, ரசிகர்களை எப்படி ஏமாற்றினாரோ! அதைப் போலவே ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்திலும் ஏமாற்றி இருக்கிறார். ஒரு சில எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். இருந்தாலும் அவருடைய கவுண்ட்டர் டயலாக்குகளுக்கு மட்டுமே தியேட்டரில் விசில் பறக்கிறது. சந்தானம் இதை புரிந்து கொள்ளாவிட்டால், அவருடைய படங்கள் தொடர் தோல்விகளை மட்டுமே சந்திக்கும்.

சந்தானத்தின் அப்பாவாக நடித்துள்ள குரு சோமசுந்தரம், அம்மாவாக நடித்துள்ள நடிகை இந்துமதி, முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராமதாஸ், ஆதிரா கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்துள்ளனர். இதில் குரு சோமசுந்தரம், இந்துமதி இருவரும் தனிக்கவனம் பெறுகின்றனர்.

கதாநாயகிக்கான எந்த அம்சமும் இல்லாத ரியா சுமன், கதாநாயகியாக நடித்து இருக்கிறார். பலமான சிபாரிசில் கதாநாயகி ஆகியிருப்பாரோ?!

குத்து மதிப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கும் தேனி ஈஸ்வர் மற்றும் சரவணனின் ஒளிப்பதிவினை பற்றி குறிப்பிட்டு சொல்ல ஒன்றுமில்லை!

ஒளிப்பதிவாளர்களைப் போலவே யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும்!

ஒரு சுவாரஷ்யமான, விறுவிறுப்பான கதைக்குரிய அனைத்து அம்சங்களும் கதையில் இருந்தாலும், கோமாளித்தனமான, வலுவில்லாத திரைக்கதையால் வெற்றி வாய்ப்பினை தவற விட்டுள்ளனர்!

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ ஏமாற்றம்!

Leave A Reply

Your email address will not be published.