பொம்மை நாயகி – விமர்சனம்!

நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் பா.இரஞ்சித். மற்றும் மனோஜ் லியோனல் ஜேசன் இணைந்து தயாரித்திருக்கும் படம் பொம்மை நாயகி. யோகிபாபு, சுபத்ரா, ஹரி, ஜி எம் குமார்,  அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி, கேலப், சிறுமி ஸ்ரீமதி உள்ளிட்ட பலர்  நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார் ஷான்.

கடலூரில் உள்ள ஒரு சின்னஞ்சிறிய டீக்கடையில் வேலை செய்து வருகிறார், யோகிபாபு. அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் மனைவி மற்றும் தனது ஒரே பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்த ஊரில் நடக்கும் ஒரு திருவிழாவின் போது, யோகிபாபுவின் மகளான  சிறுமி பொம்மை நாயகி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்க வேண்டும் என்று யோகிபாபுவை மறைமுகமாகவும், நேரிடையாகவும் மிரட்டுகின்றனர். இதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் அவருக்கு துணை நிற்கிறார். அதோடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனையும் கிடைக்கிறது. ஆனால் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருகின்றனர். இதனால் யோகிபாபுவுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

யோகிபாபு அந்த பிரச்சினையில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பது தான் பொம்மை நாயகி.

வேலுவாக யோகி பாபு, தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார். கதையுடன் எதார்த்தமாக பொருந்துகிறார். யோகி பாபுவின் மனைவியாக நடித்திருக்கும் சுபத்ரா, அதீதமமான நடிப்பினை வெளிப்படுத்துகிறார். அவரது மகளாக நடித்திருக்கும் சிறுமி ஸ்ரீமதி அருமையாக நடித்திருக்கிறார்.

யோகிபாபுவின் அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் உள்ளிட்டவர்கள் குறிப்பிடும்படி நடித்துள்ளனர்.

நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியுமே தவிர, குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகியும் அவருக்கு புகழ் பெற்றுத்தரும்.

Leave A Reply

Your email address will not be published.