ட்ராமா – விமர்சனம்!

மலையாள இயக்குனர் அஜு கிழுமலா எழுதி, இயக்கியிருக்கும் படம், ட்ராமா. ‘வைப் 3’ புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தை சசிகலா  புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

கிஷோர், ஜெய் பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் சார்லி, காவ்யா பெல்லு, நகுலன் வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ‘இரவின் நிழல்’ படத்தினை போன்றே இதுவும் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார், ட்ராமா படத்தினை இயக்கியிருக்கும் அஜு கிழுமலா. எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

ரெக்ரியேஷன் கிளப்பை விட மோசமாக செயல்படும் ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதில் புதிதாக சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு சேருகிறார் ஜெய்பாலா. புதிதாக வேலைக்கு சேர்ந்த அவர் அனைவரையும் ஒழுங்காக இருக்கும்படி கண்டிக்கிறார். இந்நிலையில் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வருகிறது. அவர்களும் பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பாலாவை பார்க்க வரும் அவரின் காதலி காவ்யா பெல்லு, தனது பிறந்த நாளை போலீஸ் ஸ்டேஷனிலேயே கேக் வெட்டி கொண்டாடுகிறார். அப்போது ஒரு சில நிமிடங்கள் ‘கரண்ட்’ கட்டாகிறது. அந்த சில நிமிடங்களில் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலையை கண்டுபிடிக்க, போலீஸ் டி. எஸ். பி. கிஷோர் வருகிறார். அவர் கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது தான் ‘ட்ராமா’ படத்தின் கதை.

இந்தக்கதையை கொண்டு மோசமான, திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார், இயக்குனர் அஜு கிழுமலா. படத்தில் நடித்த நடிகர்களில் கிஷோர், சார்லி இவர்களின் நடிப்பினை தவிர மற்றவர்களின் நடிப்பை ரசிக்க முடியவில்லை! அதிலும் நகுலன் வின்சென்ட் நடிப்பு இம்சை கொடுக்கிறது. இவரோடு சேர்ந்து ‘எலெக்ட்ரீஷியன்’களாக நடித்திருப்பவர்கள் கூட்டும் இம்சையும் சேர்ந்து ‘கொல்’கிறது.

ஒருவர் ஸ்டேஷனிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்கும் நேரத்தில், மற்ற அனைவரும் எதுவுமே நடக்காதது போல் நடந்து கொள்வது மாதிரியான காட்சிகளும் படத்தின் ஆகப்பெரும் பலவீனங்கள்..!

அட போங்கப்பா….. படம் தான் நல்லாயில்லையே! அப்புறம், அது சிங்கிள் ஷாட்டா இருந்தா…. என்ன? இல்லாட்டா…. என்ன?

Leave A Reply

Your email address will not be published.