என்ஜாய் – விமர்சனம்!

என்ஜாய் திரைப்படம் பொறுப்பற்ற இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு படம். எதைப் பற்றியும் கவலைப் படாமல், ‘என்ஜாய்’ என்ற தலைப்பிற்கு ஏற்றபடி இயக்கியிருக்கிறார், இயக்குனர் பெருமாள் காசி.

பெற்றோரின் விருப்பத்திற்காகவும் காதலியின் வற்புறுத்தலுக்காகவும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறார் மதன்குமார். அவருடன்  விக்னேஷ், ஹரீஷ்குமார்  ஆகிய மூவரும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள். இவர்களது கனவு , லட்சியம் எல்லாமே பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே. இதற்காக கொடைகானலில் பணக்காரர்கள் மட்டுமே கூடும் இரவு நேரக் கேளிக்கை விடுதிக்கு செல்கின்றனர்.

பிரபலமான கல்லூரியில் மெரிட் மூலம் சேர்ந்த நிரஞ்சனா, ஜி.வி.அபர்ணா, சாய் தன்யா ஆகிய மாணவிகள் அதே கல்லூரியில் படித்துவரும் வசதியான மானவிகளை பார்த்து அவர்களை போல் வாழ நினைக்கிறார்கள். இதற்காக சீனியர் மாணவி ஒருவரின் சிபாரிசின் பேரில் பணக்காரர்கள் கூடும் இரவு நேர கேளிக்கை விடுதியில், அங்கு வருபவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு உல்லாசம் கொடுக்க முன் வருகிறார்கள்.

இந்நிலையில் கேளிக்கை விடுதியில் இருக்கும் சைக்கோவிடம், ஒரு மாணவி சிக்கிக் கொள்கிறார். அந்த சைக்கோவிடம் இருந்து பிற மாணவிகளும் மற்றும் உல்லாசம் அனுபவிக்க வந்த இளைஞர்களும் இணைந்து காப்பாற்றுவது தான் என்ஜாய் படத்தின் கதை.

இயக்குனர் பெருமாள் காசி  இரட்டை அர்த்த வசனங்களையும், ஆபாச காட்சிகளையும்  மட்டுமே நம்பி களமிறங்கியிருப்பது திரைக்கதையில் நன்றாகவே தெரிகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் பெயரளவுக்கு மெசஜ் ஒன்றை சொல்லியிருக்கிறார்.

மதன்குமார், நடன கலைஞர் விக்னேஷ், ஹரீஷ்குமார் , கல்லூரி மாணவிகளாக நடித்திருக்கும் நிரஞ்சனா, ஜி.வி. அபர்ணா, சாய் தன்யா, ஹாசின் ,சாருமிசா ஆகியோர் இயக்குனரின் விருப்பம் அறிந்து நடித்துள்ளனர்.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவும், கே.எம்.ரயானின் இசையும் பரவாயில்லை. மாடியில் குடியிருக்கும் பெண் வரும் காட்சிகளுக்கு இசையமைப்பாளர் அனுபவித்து இசையமைத்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருக்கும் பெருமாள் காசி,  இளைஞர்களுக்கான பாடமாக  படமெடுக்கிறேன், என சொல்லி காமக்களியாட்டம் ஆடியிருக்கிறார்.

‘என்ஜாய்’ இளைய தலைமுறைக்கு விரித்த வலை!

Leave A Reply

Your email address will not be published.