‘எஃப்.ஐ.ஆர்’ : திரை விமர்சனம்!

ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட், கெமிக்கல் இஞ்சினியர் விஷ்ணு விஷால், இஸ்லாம் மதத்தை சேர்ந்த இளைஞர். இண்டர்வியூவுக்கு செல்லும் போது இவர் மதத்தினை தொடர்பு படுத்தி பல கேள்விகள் கேட்கப்படுகிறது. இதனால் பல இடஞ்சல்களை எதிர் கொள்ளும் அவர் இறுதியாக ஒரு கெமிக்கல் ஃபேக்டரியில் சேர்கிறார்.

இந்திய உளவுத்துறை, இலங்கையிலும், தெனிந்தியாவிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிராவாதிகள் திட்டமிடபட்டுள்ளதாக எச்சரிக்கிறது. மேலும் தமிழகத்தை சேர்ந்த ஒரு முக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி தலைவனாக செயல்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது. இதனையடுத்து உள்ளூர் போலீஸும் உளவு அமைப்புகளும் அவனை தேடி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்  தீவிரவாதிகளால் இலங்கையிலும், இந்தியாவிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறது. இதில் ஹைதராபாத் விமான நிலையத்திலும் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்கிறது. அது விஷ்ணுவிஷாலின் மொபைல் போனின் மூலம்  வெடிக்க வைக்கப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்படுகிறார், விஷ்ணுவிஷால். என்ன நடந்தது அந்த குண்டு வெடிப்புக்கும் விஷ்ணு விஷாலுக்கும் என்ன தொடர்பு? தமிழகத்தின் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் யார்? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் கனத்த க்ளைமாக்ஸூடன் சொல்லி இருக்கிறார், இயக்குநர் மனு ஆனந்த்.

உளவுத்துறை போலீஸிடம் சிக்கும் விஷ்ணு விஷால், இந்திய கிரிக்கெட் (முஸ்லீம்) வீரர்களின் பெயரை சொல்லி தப்பிக்கும் காட்சி, ஒட்டு மொத்த இந்தியாவையும் சிந்திக்க வைக்கும் காட்சி! இந்தியா விடுதலை பெற்றதில் இஸ்லாமியர்களின் பங்கு எப்படி முக்கியமானதோ அதே போல் இந்தியாவிற்காக உளவு அமைப்பில் வெளியே தெரியாமல் உயிர்த் தியாகம் செய்யும் இஸ்லாமிய வீரர்களும் உண்டு என்ற உண்மையை சொல்லி இருக்கிறார், இயக்குநர் மனு ஆனந்த்.

இர்ஃபான் அஹமத் என்ற துடிப்பான இஸ்லாமிய இளைஞனாக அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார் விஷ்ணு விஷால். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது கட்டுமஸ்தான உடல் கூடுதல் சுவாரஷ்யம் ஏற்படுத்துகிறது. நடிப்பிலும் கிடைத்த இடங்களில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக அவரது அம்மாவை ஆஸ்பத்திரியில் சந்திக்கும் காட்சியும், விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் சண்டையிடும் காட்சியையும் சொல்லலாம்.

ரெபா மோனிகா ஜான், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் என படத்தில் மூன்று நாயகிகள்.  மூவரில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் ஆகியோருக்கு சற்று அதிக காட்சிகள். மூவருமே கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். ரெபா மோனிகா ஜான், பாடல், சண்டைக்காட்சியில் ரசிகர்களின் கவனம் ஈர்க்கிறார்.

தேசிய உளவுத்துறை இயக்குநராக நடித்திருக்கிறார், கெளதம் வாசுதேவ் மேனன். அவருக்கேற்ற மிகச்சரியான கதாபாத்திரம். அப்படியே பொருந்தி போகிறது.

விஷ்னு விஷாலின் அம்மாவாக நடித்திருக்கும் மாலா பார்வதி, உளவுத்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் நடிகர்கள் என பலரது நடிப்பும் கதாபாத்திரங்களுக்கேற்ற சரியான தேர்வே!

அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவு ஆக்‌ஷன் படத்திற்கான ஒரே டெம்பர்மென்ட்டை மெயின்டெயின் செய்கிறது. லாங்க் ஷாட், ஏரியல் ஷாட் என எல்லாவிதமான காட்சிகளுக்கும் சிறப்பு சேர்த்துள்ளார். ஒளிப்பதிவுடன் சேர்ந்த அஷ்வத்தின் இசையும் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரித்திருக்கிறது. .

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி யார் என்பது க்ளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸாக இருப்பது படத்தின் திரைக்கதைக்கான பலம். படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே பாராட்டுக்குரியவர்.

இஸ்லாமியர்கள் என்றாலே ‘ஆபத்தனவர்கள்’ என்ற ஒரு சார்பான கருத்தை மறுத்து வந்திருக்கும்  ‘எஃப்.ஐ.ஆர்’ பாராட்டுக்குரிய படைப்பு!

ஆக்‌ஷன் விரும்பிகளுக்கான ஸ்பெஷல் படம். பார்க்கலாம்.