‘குட் நைட்’ விமர்சனம்! – ரசிகர்களை சிரிக்க வைக்கும் குறட்டை!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட்  ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம், குட் நைட். அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன், இயக்கியிருக்கிறார். இதில் மணிகண்டன்,மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக்,  பாலாஜி சக்திவேல், உமா ராமச்சந்திரன் ,பக்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

குறைந்தபட்ச தகுதிகளை கொண்ட நாயகன் மணிகண்டன் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். அவருடைய சகல சௌபாக்யங்களுக்கும் வேட்டு வைப்பது தூங்கும்போது அவர் விடும் குறட்டை சத்தம் தான். இந்த குறட்டை சத்தம், அக்கம் பக்கம் வீட்டினர் முதல் அலுவலகம் வரை அவரை பாடாய் படுத்துகிறது. இந்நிலையில் வாழ்க்கையில் பல துண்பங்களை அனுபவித்து வரும் நாயகி மீத்தா ரகுநாத், மணிகண்டன் இருவரும் காதலித்து கல்யாணம் செய்து கொள்கின்றனர். வழக்கம்போல் மணிகண்டனின் குறட்டை சத்தம், இவர்களின் திருமண வாழ்க்கையில் வெடிகுண்டு வைக்கிறது.

மணிகண்டன், மீத்தா ரகுநாத் இருவரும் பிரிவை நோக்கி செல்கின்றனர். முடிவு என்ன? என்பதை, சின்ன சின்ன எமோஷன் கலந்த  நமட்டு சிரிப்புகளாகவும், வெடிச்சிரிப்புகளாலும் திரைக்கதையாக்கி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்கிறார், இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.

நாயகனாக நடித்திருக்கும் மணிகண்டனுக்கு ஏற்ற கதாபாத்திரம். படம் முழுவதும் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். குறட்டையால் படும் துன்பத்தை அழகாக பிரதிபலிக்கிறார். அதிலும்  டீம் லீடர் பக்ஸுடன் (பகவதி பெருமாள்) ஏற்படும் மோதலில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் போதும், க்ளைமாக்ஸில் அதை திருப்பி கொடுக்கும் போதும் மிகச் சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். மணிகண்டனுக்கும், ரமேஷ் திலக்கிற்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கலக்கல் காமெடி கலாட்டா! அதிலும் அக்கா – வாட்டர் ஃபில்ட்டர் காமெடி செம… மணிகண்டன் – மீத்தா ரகுநாத் இருவருக்கிடையேயான எமோஷனல் காட்சிகளும் சிறப்பு.

அதிர்ஷ்டம் கெட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி மீத்தா ரகுநாத், அந்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போகிறார். சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

ரமேஷ் திலக், ரைச்சேல் ரெபாகா இருவரும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இருவருமே சிறப்பு.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவரது மனைவியாக நடித்திருக்கும் கவுசல்யா நடராஜன், தாத்தா பாட்டியாக நடித்திருக்கும் இவர்களது நடிப்பு இன்னும் சிறப்பு.

இப்படியே குட் நைட் படத்தில் நடித்திருக்கும் அத்தனை நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவனின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்தின் பலம்.

மொத்தத்தில், குட் நைட் திரைப்படத்தை அனைவரும் பார்த்து மகிழலாம்.

ரேட்டிங் 3/5