ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், கலகத் (புரட்சிக் காரன்) தலைவன். உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் இணைந்து நடித்திருக்க இவர்களுடன் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் வரும் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ‘கலகத் தலைவன்’ படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் என்பதால் அந்த எதிர்பார்ப்பு அதிகமாகயிருந்தது. ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறாரா? பார்க்கலாம்.
மோட்டார் வாகன சந்தையில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வஜ்ரா. அந்நிறுவனம் ஒரு புதிய வகையான வணிக வாகனத்தை அறிமுகம் செய்கிறது. சுற்றுச்சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் அந்த வாகனம், குறைவான எரிபொருளில் அதிகப்படியான தூரத்திற்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து வஜ்ரா நிறுவனம் அதை சந்தை படுத்த முயற்சி செய்கிறது. இதை சிலர் அம்பலப் படுத்துகின்றனர். இதனால் கடும் சரிவை சந்திக்கிறது அந்த நிறுவனம். இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து ஒழித்துக் கட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இல்லீகல் ‘கமாண்டோ’ ஆரவ், களமிறக்கப்படுகிறார். அவர் கண்டுபிடித்தாரா? உண்மையை அம்பலப்படுத்தியவர்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு? என்பது தான் ‘கலகத் தலைவன்’ படத்தின் விறு விறுப்பும், நேர்த்தியுமான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
முதலில் மெதுவாக ஆரம்பிக்கும் படம், பின்னர் நேரம் செல்லச் செல்ல வேகமெடுக்கிறது. கதையை விட்டு விலகிச்செல்லாத நேர்த்தியான, திரைக்கதை மேலும் சுவாரஷ்யத்தை ஏற்படுத்துகிறது. நிகழும் ஒவ்வொரு சம்பவங்களும் முடிந்தவரை லாஜிக் மீறாமல் படமாக்கப்பட்டிருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிகிறது.
படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் சிறப்பான நடிப்பினை வரவழைத்துள்ளார், இயக்குனர் மகிழ்திருமேனி. உதயநிதி ஸ்டாலின் அவரது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கெமிக்கல் எஞ்சினியரான அவர், க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தனது புத்தி சாதூர்யத்தால் எதிரிகளை வீழ்த்துவது ரசனைக்குரிய நல்ல காட்சியமைப்பு!
அதுபோல் வில்லனாக வரும் ஆரவ் ஆர்பாட்டமில்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலுமே அவர் மிரட்டியிருக்கிறார். ஆரவ், நிதி அகர்வாலை வயிற்றில் எட்டி மிதிக்கும் காட்சி, பகீர் காட்சியமைப்பு. இந்த சண்டைக் காட்சி மட்டுமின்றி அனைத்து சண்டைக் காட்சிகளையுமே சிறப்பாக வடிவமைத்த சண்டைப் பயிற்சியாளருக்கு பாராட்டுக்கள்.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் அழகாலும், நடிப்பாலும் அனைவரையும் கவர்கிறார். கொடுக்கப்பட்ட அனைத்துவிதமான காட்சிகளிலுமே சிறப்பாக நடித்திருக்கிறார்.
கலையரசன், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் என அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, எடிட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. பின்னணி இசை இன்னும் சற்று மேம்பட்டு இருந்திருக்கலாம்.
இயக்குனர் மகிழ்திருமேனி ‘கலகத் தலைவன்’ படத்தின் மூலம், பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப் படுவதால் நிகழும் பொருளாதார சீர்கேடுகளை வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார். அதோடு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் டொனேஷன். அதன் மூலம் அரசை அவர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார்.
கலகத் தலைவன் – விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லர்!