உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இருவரும் இணைந்து நடித்திருக்க, அவர்களுடன் ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ. கருப்பையா, சென்ட்ராயன், மற்றும் கு. ஞானசம்பந்தம் ஆகியோரது நடிப்பினில், வெளியாகியிருக்கும் திரைப்படம், கண்ணை நம்பாதே.
‘LIPI Cine Crafts’ சார்பில், வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ள ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தினை, மு. மாறன் எழுதி, இயக்கியுள்ளார். இது ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர்! அது, ரசிகர்களின் ரசனைக்குரிய த்ரில்லரா? பார்க்கலாம்!
ஆத்மிகாவின் வீட்டில் பொய் சொல்லி வாடகைக்கு குடியேறுகிறார், அவருடைய காதலரான உதயநிதி. இந்த விஷயம் ஆத்மிகாவின் அப்பா, கு. ஞானசம்பந்தத்திற்கு தெரியவருகிறது. உதயநிதி அந்த வீட்டை விட்டு உடனே வெளியேற்றப்படுகிறார். இதனால், வேறு வழியின்றி பிரசன்னாவின் வீட்டில் அவர் வாடகைக்கு குடியேறுகிறார்.
அன்று இரவு, உதயநிதி அவரது நண்பர் சதீஷ், பிரசன்னா ஆகியோர் தண்ணியடிக்க செல்லுகின்றனர். பிரசன்னாவும், சதீஷூம் தண்ணியடிக்க, உதயநிதி, கார் ஓட்டமுடியாத நிலையிலிருக்கும், பூமிகா சாவ்லாவை அவரது வீட்டில் கொண்டுபோய் விடுகிறார். தனிமையிலிருக்கும் பூமிகா சாவ்லாவின் மேல் பிரசன்னாவுக்கு சபலம் ஏற்படுகிறது.
இதனால் உதயநிதிக்கு தெரியாமல் பூமிகா சாவ்லாவின் வீட்டிற்கு செல்லும் பிரசன்னா, அவரை பலாத்காரம் செய்ய முயற்சிக்கையில், பூமிகா சாவ்லா கொல்லப்படுகிறார். இந்தக் கொலையை, உதயநிதியின் மேல் சுமத்தி விட்டு அவர் தப்பிக்க நினைக்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தின் விறுவிறுப்பான, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
ஒரு விறுவிறுப்பான ‘க்ரைம் த்ரில்லர்’ திரைப்படத்தின், திரைக்கதை எப்படி இருக்க வேண்டும், என்பதற்கு உதாரணமாக இருக்கிறது, ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம். கதையிலிருந்து பிசகாமல், ஒரே நேர்க்கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையும், காட்சியமைப்பும் சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் பிரியர்களுக்கு விருந்தாக அமைகிறது. கடைசிவரை நீடிக்கும் சஸ்பென்ஸுக்காக இயக்குனர் மு.மாறனுக்கு சபாஷ்!
கர்ப்பினி பெண்களிடம் சுரக்கும் ‘CPH4’ – 6-carboxytetrahydropterin synthase. (கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பத்தில் ஆறு வாரங்களுக்குப் பிறகு சுரக்கும் ஒரு திரவம் ) என்ற திரவத்தை சுற்றி நடக்கும் க்ரைம் குறித்து, கதை எழுதியிருக்கிறார், இயக்குனர் மு.மாறன். இது ஒரு ஆங்கில படத்தில் வந்ததாக நினைவு! இருந்தாலும் தமிழுக்கு புதுசு. எதையும் யோசிக்க விடாத திரைக்கதை தான் படத்தின் மிகப்பெரிய பலம். காட்சிகளை மேம்படுத்தும் சித்து குமாரின் இசையும், ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவும் சிறப்பு!
காலையில் கார் டிக்கியில் பிணத்தை பார்த்த பிரசன்னாவும், உதயநிதியும் இரவில் தான் அதை அப்புறபடுத்துகிறார்கள். பகல் முழுவதும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போன்ற லாஜிக் மீறல்கள் தென்பட்டாலும், மொத்த படமாக பார்க்கும் போது ஓகே தான்!
ஆத்மிகா, ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா சாவ்லா, வசுந்தரா காஷ்யப், சதீஷ், மாரிமுத்து, சுபிக்ஷா கிருஷ்ணன், பழ. கருப்பையா, சென்ட்ராயன், கு. ஞானசம்பந்தம் ஆகியோர் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலினிடம் காணப்பட வேண்டிய பயமும், பதட்டமும் பல இடங்களில் மிஸ்ஸிங்!
மற்றபடி படத்தில் குறை என்று சொல்லும்படி எதுவும் இல்லை! க்ளைமாக்ஸ், ஒரு திருப்தியை கொடுக்கவில்லை!?
மொத்தத்தில் ‘கண்ணை நம்பாதே’ சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படம்!