‘கட்சிக்காரன்’ – விமர்சனம்!

விஜித் சரவணன், ஸ்வேதா டாரதி, அப்புக்குட்டி, சிவ சேனாதிபதி, ஏ.ஆர். தெனாலி, விஜய் கெளதம், சி.என்.பிரபாகரன்,வின்சென்ட்ராய், குமர வடிவேலு, மாயி சுந்தர், ரமேஷ் பாண்டியன், பரந்தாமன், சாய்லட்சுமி,நந்தகுமார், சக்திவேல் முருகன், நடிகர் நாசரின் தம்பி ஜவகர் மற்றும் பலர் நடித்துள்ள படம், கட்சிக்காரன்.

ப.ஐயப்பன் எழுதி, இயக்கியுள்ள கட்சிக்காரன் படத்தினை சரவணன் செல்வராஜ், மலர்க்கொடி முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மதன் குமார் ஒளிப்பதிவு செய்திருக்க, ரோஷன் ஜோசப்,சி.எம். மகேந்திரா  ஆகிய இருவரும் இசை அமைத்துள்ளனர்.

எப்படி இருக்கிறது ‘கட்சிக்காரன்’ பார்கக்லாம்.

கதாநாயகன் விஜித் சரவணன், சதா சர்வகாலமும் தனது கட்சிக்காகவும், தலைவருக்காகவும் எந்தவித பிரதி பலனும் எதிர்பாராமல், மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில் உழைப்பவர். ஆனால் அவருடைய கட்சித் தலைவர் அப்படி இல்லை. மேலும் விஜித் சரவணன் கட்சித்தலைவர் சிவ சேனாதிபதியால் ஏமாற்றப்படுகிறார்.  இதனால் இருவருக்குமிடையே மோதல் உருவாகிறது. அந்த மோதல் என்னவானது என்பதே ‘கட்சிக்காரன்’ படத்தின் கதை!

கதாநாயகன் விஜித் சரவணன், தனது கட்சியின் தலைவருக்காக விசுவாசத்துடன் முழுமூச்சாக போஸ்டர், கொடி, தோரணம் கட்டுவது, கட்சிக்கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதும், விழாக்கள் ஏற்பாடு செய்யும்போதும், வீட்டில் இருப்பவர்களை பற்றி கவலைப்படாமல் தாலியையும் விற்று கட்சிக்கு செலவு செய்யும் போதும், அப்பாவி கட்சித்தொண்டனை கண்முன் நிறுத்துகிறார்.

விஜித் சரவணன் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா டாரதியின் தோற்றம் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறது.

கட்சித் தலைவராக வரும் சிவ சேனாதிபதி  இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது உதவியாளராக வரும் அப்புகுட்டி, விஜித் சரவணனின் நண்பனாக வரும் தெனாலி உள்ளிட்டவர்கள் குறுப்பிடும்படி நடித்துள்ளனர்.

அரசியல்வாதிகளின்  தொண்டர்கள்  மீதான அலட்சியத்தையும் ,மக்கள் விரோதப் போக்கையும், ஊழல்களில் கொடி கட்டிப் பறப்பதையும் , பணம் சம்பாதிக்க எதிரெதிர்க் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதையும் பல்வேறு வசனங்களின் மூலம் இப்படம் கேள்வி கேட்கிறது.  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படவும் வைக்கிறது.

படத்திற்குப் பலம் துணிச்சலான  வசனங்கள் தான். தல, தளபதி சொல்லத் தயங்கும் பல வசனங்கள் விஜித் சரவணன் மூலம் மின்னலாக பளிச்சிடுகின்றன.

‘செங்குறிச்சி சின்ன பொண்ணு சிரிச்சாளே’ என்ற பாடல் கிராமத்து அழகைக் கண் முன்னே கொண்டு வருகிறது. அதற்கான இசையும் பொருத்தம். இருப்பினும் அழுத்தமில்லாத, அமெச்சூர் காட்சிகளால் ரசிகர்களிடையே அந்நியப்பட்டு நிற்கிறான், கட்சிக்காரன்!

Leave A Reply

Your email address will not be published.