வினீத் ஸ்ரீனிவாசன், அர்ஷா சாந்தினி பைஜு, சூரஜ் வெஞ்சரமூடு, சுதி கொப்பா, தன்விராம், ஜார்ஜ் கோரா, மணிகண்டன், விஜயன் கரந்தூர் உள்ளிட்ட பலர் நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். விமல் கோபால கிருஷ்ணனுடன் இனைந்து எழுதி, இயக்கியிருக்கிறார், அபினவ் சுந்தர் நாயக் .
வழக்கமான சினிமா சம்பிரதாயங்களை சற்றே புறந்தள்ளிவிட்டு சீரியசான ஒரு விஷயத்தை அபத்தச் சிரிப்புடன் சொல்லியிருக்கிறார்கள். எப்படி இருக்கிறது?
ஜூனியர் வக்கீல் வினீத் ஸ்ரீனிவாசன், எப்படியாவது தனியாக வாதாடி சீனியர் வக்கீலாக வலம் வர வேண்டும் என நினைக்கிறார். இதற்காக தான் வேலை செய்யும் சீனியர் வக்கீலின் வேலைக்கே உலை வைக்க முற்படுகிறார். அதனால் வேலையையும் இழக்கிறார். இந்நிலையில் அவரது அம்மாவுக்கு காலில் முறிவு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய ஆஸ்பத்திரிக்கு செல்கிறார். அங்கே பணம் இல்லாமல் தவிக்கும் அவருக்கு ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் மோசடியில் கில்லாடியாக இருக்கும் வக்கீல் சூரஜ் வெஞ்சரமூடுவின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் மூலம் சிகிச்சைக்கான செலவினை எளிதாக சமாளிக்கிறார்.
சூரஜ் வெஞ்சரமூடுவின் மோசடி ‘ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ்’ தில்லாலங்கடிகளை அவரிடமே கற்றுக்கொண்டு அவரை ஓரம் கட்டிவிடுகிறார். இதனால இருவருக்கும் உரசல் ஏற்படுகிறது. வினீத் ஸ்ரீனிவாசன் செய்யும் இந்த மோசடிகள், ஜட்ஜுக்கு தெரிய வருகிறது. அதனால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்படும் நிலை அவருக்கு வருகிறது. இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் ‘முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’ படத்தின் கதை!
டைட்டில் போடுவதிலிருந்து க்ளைமாக்ஸ் வரை சிரிப்பினை வர வைக்கிறார்கள்.
வக்கீலாக நடித்திருக்கும் வினீத் ஶ்ரீனிவாசன் கதாபாத்திரத்திற்கேற்ற கச்சிதமான தேர்வு. அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் குரூர சம்பவங்கள் மாஸ்! காருக்குள் பாம்பினை விடும் காட்சியிலும், மழை விழும் நேரத்தில் மரத்தினை வெட்டும் காட்சியிலும் சூப்பர் பெர்ஃபார்மன்ஸ்! அதேபோல் காதலியாக வரும் அர்ஷா சாந்தினி பைஜுவை தன் வலையில் வீழ்த்தும் காட்சியிலும் நன்றாக நடித்துள்ளார்.
வினீத் ஶ்ரீனிவாசனின் கதாபாத்திரத்திற்கு சற்றும் சளைக்காத கதாபாத்திரம் அர்ஷா சாந்தினி பைஜுவுக்கு. நன்றாக நடித்திருக்கிறார்.
படத்தில் நடித்த ஒவ்வொருவருமே சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளனர்.
விசுவஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவும், சிபி மேத்யூ அலெக்ஸ் சின் பின்னணி இசையும் பாராட்டும் படி இருக்கிறது.
இந்த வகையான அபத்தச் சிரிப்பு படம் சிலருக்கு பிடிக்கலாம்.