தலைக்கூத்தல் – விமர்சனம்!

கட்டிடத் தொழிலாளியான சமுத்திரக்கனியின் தந்தை கலைச் செல்வன்,  அவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்ததால் கோமா நிலைக்கு செல்கிறார். தந்தையின் மேல் அதீத அன்பினை கொண்ட சமுத்திரக்கனி எப்படியாவது தன் தந்தையை பழைய நிலைக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அவரை வீட்டில் வைத்து பராமரித்து வருகிறார்.

சமுத்திரக்கனி, அன்றாட வாழ்வாதாரத்திற்கு கடும் சிரமப்படும் நிலையில், இரவு நேரக் காவலாளியாக ஒரு ஏடிஎம்மில் வேலை செய்துவர, அவரது மனைவி வசுந்துரா தீப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தந்தையை பராமரிக்க போதிய பணமின்றி, கடனும் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாதங்கள் பல சென்றாலும் தந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை! குடும்பம் பெரும் கடன் சுமையில் சிக்குகிறது.

அதனால் ஊரில் உள்ள பெரியவர்களும், சமுத்திரக்கனியின் மாமனார், மைத்துனர் உள்ளிட்டவர்களும் சமுத்திரக்கனியின் தந்தைக்கு தலைக்கூத்தல் செய்து அவரை கருனை கொலை செய்ய முடிவெடுக்கின்றனர். இதற்கு சமுத்திரக்கனி  எதிர்ப்பு தெரிவிக்கிறார். கடும் பொருளாதார பற்றாக்குறையில் இருக்கும் அவர் என்ன செய்தார்? என்பதை வலிய திணிக்கப்பட்ட சோகங்களுடன், சொல்வதே ‘தலைக்கூத்தல்’.

தலைக்கூத்தல் படத்தில் முதல் பாராட்டினையும், கைதட்டல்களையும் பெறுபவர், சமுத்திரக்கனியின் அப்பாவாக நடித்திருக்கும் கலைச்செல்வன். பிரமாதமான நடிப்பு! அசல் கோமா நோயாளியை போன்றே காட்சி தருகிறார். ஒரு காட்சியில் கண்ணீர் வழிய.. கண் சிமிட்டாமல் நடித்து பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைக்கிறார்.

அடுத்தாக சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் வசுந்துரா.. செம்ம, அவர் தீப்பெட்டி அடுக்கும் ஸ்டைலும், சூப்பர் வைசர் கொடுத்த நெயில் பாலிஷ் பாட்டிலை குப்பை தொட்டியில் போட செல்லும் காட்சியும், இதற்கெல்லாம் மேல் கலைச்செல்வன் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டவுடன், ‘நான் அவர வேணும்னு தலைக்கூத்தல் செய்ய சொல்லலை’ என மன்னிப்பு கேட்பது போல் சமுத்திரக்கனியிடம் முறையிடும் காட்சிகளும், அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது. அழகாக நடித்திருக்கிறார். திறமையான நடிப்பு!

மற்ற நடிகர், நடிகைகளும் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். குறிப்பாக குறி சொல்லும் கிழவியாக வரும் வையாபுரி சூப்பர். இதில் தகுந்த நடிப்பினை கொடுக்காமல் படு செயற்கையாக நடித்திருப்பவர்கள், சமுத்திரக்கனியும் கதிரும் தான்.

சமுத்திரக்கனி அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கவில்லை, என்றே தோன்றுகிறது. பல மாதங்கள் கண் விழிக்காத தந்தை, கண் விழித்தவுடன் அவர் காட்ட வேண்டிய மகிழ்ச்சியை காட்டத் தவறுகிறார். அதேபோல் சோகத்திலும்! படம் முழுவதும் ஒரே டெம்ப்ளேட்!

மேலும் வசுந்த்ரா, தீப்பெட்டி தொழிற்சாலையில் தன்னிடம் சூப்பர் வைசர் அத்து மீறுவதை சமுத்திரக்கனியிடம் சொல்லும் காட்சியையும் சொல்லலாம். சமுத்திரக்கனி எந்த உணர்வினையும் சரியாக வெளிப்படுத்தாமல் திரையில் தோன்றுவது சலிப்பை தருகிறது.

வலுக்கட்டயாமாக, திரைக்கதைக்கு எந்த விதத்திலும் உதவாத, ஆடுகளம் முருகதாஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருவது எதற்கு? தெரியவில்லை.

அதேபோல் கதிர், கதா நந்தி இருவரின் காதல், சாதி காட்சிகள் எதற்கு? என்று தெரிய வில்லை.. ஒரே படத்திற்குள் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்ற கட்டாயத்தில் படமாக்கியிருக்கிறார், இயக்குனர் ஜெய்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

தலைக்கூத்தல் – முழுமையற்ற படைப்பு!

Leave A Reply

Your email address will not be published.