வி 3 – விமர்சனம்!

வீடு வீடாக சென்று பேப்பர் போடும் வேலையை செய்து வருபவர் ‘ஆடுகளம்’ நரேன். அவருக்கு பாவனா கௌடா, மற்றும் எஸ்தர் அனில் என இரண்டு மகள்கள். இதில் பாவனா கௌடாவை ஒரு கும்பல், கூட்டு பலாத்காரம் செய்து, கொலை செய்துவிடுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. அது காவல் துறைக்கும் அழுத்தம் கொடுக்கிறது. காவல் துறையினரின் ஒரு குழு குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நேரத்தில், இரு தரப்பினருக்கும் நடக்கும் மோதலில் குற்றவாளிகள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள்.

குற்றவாளிகளின் உறவினர்கள், காவல்துறை போலியாக என்கவுண்டர் செய்ததாக கூறி போராட்டத்தில் குதிக்கின்றனர். காவல் துறை அவர்களை அடித்து ஒடுக்குகிறது. நிலைமை மோசமானதால் இதில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு, வரலட்சுமி சரத்குமார் தலைமையிலான குழுவிடம் விசாரணை நடத்த உத்தரவிடுகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிறது. இதுவே  ‘வி 3’ படத்தின் கதை.

மனித உரிமை ஆணையத்தின் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவரது மிடுக்கான பேச்சும் கண்டிப்பான விசாரணையும் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.

விந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவனா கௌடா, சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது அவலக்குரல், இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. விந்தியாவின் தங்கை வேடத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில்,  ஆணையத்திடம் கேள்வி கேட்டு சீறும் இடத்தில் ஒட்டுமொத்த பெண்களின் கேள்வியாக இருக்கிறது. இந்த இருவரின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் ஓகே.

ஒளிப்பதிவாளர் சிவா பிரபுவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் எலன் செபஸ்டியன் இசையும் ஓகே.

அழுத்தமான கதை எழுதி, இயக்கியிருக்கும் அமுதவாணன்,  அழுத்தமற்ற வகையில் படமாக்கியிருக்கிறார். மேலும், இது போன்ற பாலியல் வன்முறைகளுக்கு, விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குவதே தீர்வு. என சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.