விக்ராந்த் ரோணா – விமர்சனம்!

கிச்சா சுதீப் நடிப்பில் ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில்  வெளியாகியிருக்கும் படம்  ‘விக்ராந்த் ரோணா’. அனுப் பண்டாரி இயக்கத்தில் நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்து, நடித்துள்ளார்.  இவருடன் நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்திருக்க, வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

3டி வடிவில் சுமார் 2.50 நிமிடங்கள் ஓடும் ‘விக்ராந்த் ரோணா’திரைப்படத்தின் ட்ரைலர்களும், போஸ்டர்களும் இப்படத்தை எப்படியாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அந்த ஆவலை பூர்த்தி செய்திருக்கிறதா இந்தப்படம்? பார்க்கலாம்.

நள்ளிரவு நேரம். அடர்ந்த இருண்ட காடுகளின் வழியே ஒரு மலை கிராமத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள், ஒரு அம்மாவும், மகளும். அப்போது ஒரு அமானுஷ்யமான சக்தி ஒன்று அவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்துகிறது. இந்தப்போராட்டத்தில் அம்மா தாக்கப்பட்டு கீழே விழ, மகள் மரத்தில் தூக்கில் தொங்குகிறார். இதை கண்டுபிடிக்க அந்த ஊருக்கு தனது மகளுடன் வருகிறார், இன்ஸ்பெக்டரான கிச்சா சுதீப். என்ன நடந்தது. என்பதை கும்மிருட்டிலேயே சொல்லியிருக்கிறார்கள். ஆமாம் கும்மிருட்டை நம்பி மட்டும் திரைக்கதை அமைத்திருப்பதால் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்க்!

குழப்பமான திரைக்கதையினால் ரசிக்க முடியவில்லை! காட்சிகள் தனித்தனியாக கோர்வையற்று இருக்கிறது. இதனால் படம் பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது, தெளிவற்ற நிலையில் இருக்கிறது. க்ளைமாக்ஸை நெருங்கும் முன்னர் தான் ஒரு மாதிரியான ஊகத்திற்கு வரமுடிகிறது.

கிச்சா சுதீப் ஸ்டைலாக வருகிறார். அவருடைய அட்டகாசமான ஸ்க்ரீன் பிரசன்ஸ் படத்தினை ஓரளவு காப்பாற்றுகிறது. அவர் துப்பறியும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஜீவன் இருக்கிறது.. ‘ரா ரா ராக்கம்மா’ பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கும் கிச்சா சுதீப்பும், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸூம் தூள் கிளப்பியிருக்கிறார்கள். ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் ‘அழகு’ அங்கங்கள் ஆடாதவரையும் ஆடவைத்து விடும்!

அஜனீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் கேட்கமுடிகிறது. பழனிபாரதி பாடல்கள் எழுதியிருக்கிறார். வரிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் ப்ரியா, மதுசூதன்ராவ் உள்ளிட்ட சிலர் தவிர்த்து படத்தில் நடித்த பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் ரசிகர்கள் கவனம் சிதைகிறது. காட்சிகளில் வலிமை சேர்த்திருந்தால் இது தெரியாது!

ஒளிப்பதிவாளர் வில்லியம் டேவிட்டின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.. குகைக்குள் நடக்கும் க்ளைமாக்ஸ் ஃபைட் காட்சியில் சூப்பராக படம்பிடித்துள்ளார். இரவு நேரக்காட்சிகளிலும் நேர்த்தி!

‘3டி தொழில்நுட்பம்’ இந்தப்படத்திற்கு தேவையா? என்ற கேள்வி படம் பார்ப்பவர்களின் மனதில் எழுகிறது.. ‘3டி’ தொழில்நுட்பத்தை அனுபவிப்பது மாதிரியான( முகத்திற்கு மிக அருகே நடப்பது மாதிரியான காட்சிகள்) எந்தக்காட்சிகளும் இல்லாததால், அதை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இது, ஏமாற்றம் அளிக்கும்.

கதை எழுதி இயக்கியிருக்கும் அனுப் பண்டாரி, தெளிவான திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால், வெகுவாக ரசித்து இருக்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.