விருமன் – விமர்சனம்!

நடிகர் சூர்யாவின் ‘2D Entertainment’ நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படம், விருமன். கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்க, இயக்குநர் ஷங்கரின் மகளான ‘அதிதி ஷங்கர்’ இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து, அறிமுகமாகியுள்ளார்.

விருமன் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, கருணாஸ், வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், மனோஜ், ‘மைனா’ நந்தினி, வசுமித்ரா, அருந்ததி நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் முத்தையா எழுதி, இயக்கியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ்  –  சரண்யா பொன்வன்னன் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள். அதில் மூன்று பிள்ளைகள் அப்பா வின் செல்லம்.  கடைசி பிள்ளையான கார்த்தி அம்மாவின்  செல்லம். பிரகாஷ்ராஜ் தனது மனைவி  சரண்யா பொன்வண்ணன்,  ஏழை என்பதால் அவர் மீது ஒரு வெறுப்புடன் இருப்பவர். அவர் செய்யும் ஒரு தவறு, சரண்யா பொன்வண்ணன் தற்கொலை செய்து கொள்ள காரணமாகிறது. இதனால் அப்பாவின் மீது கார்த்தி கடும் கோபம் கொள்கிறார். அம்மாவை இழந்த கார்த்தி தாய்மாமன் ராஜ்கிரனிடம் வளர்கிறார். வளர்ந்த பின், அப்பாவை அவமானப்படுத்தும் வழிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் இருவருக்குள்ளும் உருவான பகை என்ன ஆனது என்பது தான் விருமன் படத்தின் கதை.

கிராமத்து இளைஞனாக கார்த்தி, தனது நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை மெருகூட்டி இருக்கிறார். வழக்கம் போல் செண்டிமெண்ட், காதல் காட்சி, ஆக்‌ஷன் காட்சி என அனைத்து ஏரியாக்களிலும் அட்டகாசமாக நடித்து இருக்கிறார்.

கார்த்தியுடன் இனைந்து நடித்திருக்கும் அறிமுக நாயகி அதிதி ஷங்கர், முதல் படத்திலேயே தனது முத்திரையை அழுத்தமாக பதித்து இருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர் ரசிகர்களின் மனம் கவருகிறார்.

கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் பிரகாஷ் ராஜ், மாமாவாக நடித்திருக்கும் ராஜ்கிரண். இவர்கள் இருவரும் தங்களது நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் தனி கவனத்தை ஏற்படுத்தி பாராட்டுக்களை பெறுகின்றனர்.

ஒரு சில இடங்களில் மட்டுமே சூரியின் காமெடிக்  காட்சிகள்  ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால் சிங்கம் புலி பல காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். கருணாஸ், ஆர்.கே.சுரேஷ், ஜி.எம்.சுந்தர், இளவரசு, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், சரண்யா பொன்வன்னன், வசுமித்ரா ஆகியோர் கிராமத்து படத்திற்கான அடையாளத்தினை கொடுத்துள்ளனர்.

கிராமத்து பின்னணியில் ஒளிப்பதிவாளர்  செல்வகுமார் எஸ்.கே ,  காட்சிகளை  ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.  யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக  இருந்தாலும், இன்னும் அதிகமாக எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமே!

இயக்குனர் முத்தையாவின் முந்தைய படங்களை போல் ஒரே மாதிரியான கிராமத்து கதை, யூகிக்கக்கூடிய வழக்கமான காட்சிகள்,  என  திரைக்கதை அமைந்திருந்தாலும் குடும்பத்துடன்  பார்க்கக் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கிறது.

மொத்தத்தில்,  கார்த்தி – அதிதி ஷங்கர் இருவரின் ஸ்கிரீன் ப்ரசென்ஸும் இயக்குனர் முத்தையாவை காப்பாற்றி இருக்கிறது!