யசோதா – விமர்சனம்!

கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமந்தாவுடன் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், சத்ரு, முரளி சர்மா, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், யசோதா.  சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ‘ஸ்ரீதேவி மூவிஸ்’  நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குனர்கள்  ஹரி – ஹரிஷ்  கதை எழுதி, இயக்கியிருக்கிறார்கள்.

ஹாலிவுட் மாடல் அழகி ஒருவரும் புகழ்பெற்ற தொழிலதிபர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். சத்ருவின் தலைமையில், சம்பத் ராஜின் வழிகாட்டுதலின் படி போலீஸார் குழு விசாரணையில் இறங்குகிறது.

இதனிடையே சமந்தா, தனது தங்கையின் மருத்துவச் செலவுக்காக  தன்னை வாடகைத் தாயாக பயன்படுத்தி கொள்ள சம்மதிக்கிறார். இதனால், வரலக்‌ஷ்மி சரத்குமாரால் நடத்தப்படும் ஒரு இடத்தில்  அவர் தங்கவைக்கப்படுகிறார். சமந்தாவை போல் பல வாடகை தாயார்கள் பலர் அங்கு இருந்து வருகின்றனர். அதில் ஒருவருக்கு  பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டவர் மாயமாகிறார். இது சமந்தாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அது பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அவர் செல்கிறார். இதனால் கடும் கோபத்திற்கு ஆளாகும் வரலக்‌ஷ்மி சரத்குமார், சமந்தாவை கொல்ல செய்ய முடிவு செய்கிறார்.

சமந்தா கொல்லப்பட்டாரா? இல்லையா? மாடல் அழகி, தொழிலதிபர் கொலையாளிகள் யார், என்பது தான் யசோத படத்தின் சுவாரஷ்யமான, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

வாடகைத் தாய் கதைக்களம் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல! என்றாலும் ‘யசோதா’ சற்றே புதிது. இதை படம் பார்க்கும்போது உணரலாம். சமந்தாவின் கதாபாத்திர வடிவமைப்பு வாவ்! சொல்ல வைக்கும். எமோஷனாலக நடிப்பதற்கும், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடியாக சுழன்று அடிப்பதற்கும் நல்ல வாய்ப்பு. அதை திறம்பட செய்து, ரசிகர்களிடம் கைதட்டல்களை அள்ளுகிறார். இப்படம் அவரது ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கும்.

ஸ்டைல், திமிர் இரண்டையும் சம அளவில் கலந்து நடித்து அசத்துகிறார் வரலக்ஷ்மி சரத்குமார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

உன்னி முகுந்தன், சம்பத் ராஜ், சத்ரு, முரளி சர்மா உள்ளிட்ட  பலரும் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பினை கொடுத்துள்ளனர்.

சற்றே சுவாரஷ்யமற்று ஆரம்பிக்கும் படம், அதன்பிறகு அடுத்தடுத்த சுவாரஷ்யமான திருப்பங்களுடன் க்ளைமாக்ஸ் வரை செல்கிறது.

திரைக்கதைக்கேற்ற காட்சியமைப்பும், காட்சியமைப்புக்கேற்ற ஒளிப்பதிவும் இவைகளுக்கேற்ற பின்னணி இசையும் படத்தினை மேம்படுத்துகிறது. மேலும் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப  விஷயங்களிலும்  குறைசொல்ல எதுவும் இல்லை.

லாஜிக்கலா, சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது கர்ப்பினி பெண்ணான சமந்தாவின் வயிற்றில் பலமாக தாக்கிய பிறகும் அவர் பறந்து.. பறந்து.. சண்டை செய்யும் காட்சி?!

மற்றபடி ‘யசோதா’ போரடிக்காத ஒரு விறு விறுப்பான படம்!

Leave A Reply

Your email address will not be published.