‘அமரன்’ உருவானது எப்படி? – இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் அமரன்.தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரான முகுந்த்  வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்க , ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படம் உருவானது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில்,”பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது ஒருநாள் கமல்ஹாசன் என்னிடம், ‘ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என சொன்னார். ராஜ்கமல் ஆபீஸில் அதற்கென ஒரு குழு உள்ளது. நான் மகேந்திரன் சாரிடம் அமரன் கதையோ, முன்னாடி சொன்ன கதையோ அல்லாமல் உண்மையான சம்பவத்தை அடிப்படையாக வைத்து கதை சொன்னேன். அவருக்கு பிடித்து விட்டது. அதன்பிறகு வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களிடமும் கதை சொல்ல சொன்னார். நானும் சொன்னேன். அவர்கள் உடனடியாக கமலுக்கு போன் செய்து இந்த கதையை பண்ணலாம் என சொன்னார்கள். இந்த கதை உருவானது குறித்து சொல்வதென்றால் அப்போது எனக்கு மும்பையில் இருக்கும் நண்பர் ஒருவர் போன் செய்து, “இந்தியாவின் மிகவும் அச்சமற்ற: நவீன இராணுவத்தின் உண்மைக் கதைகள்” என்ற புத்தகம் இருக்கிறது. அதில் தற்போது 4 பாகங்கள் வந்து விட்டது. அதன் ஒவ்வொரு புத்தகமும் 15 ஹீரோக்களுக்கு சமர்பிக்கப்பட்டு இருக்கும். அதில் போர்முனை, இந்திய பாதுகாப்புத்துறையில் இருப்பவர்களின் வீரதீர செயல்களை பதிவு பண்ணிய தகவல்கள் இருக்கும்.

அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பற்றி  2 தகவல்கள் எழுதியிருப்பதாக சொன்னார்கள். நான் முதலில் மேஜர் சரவணனாக இருக்கும் எண்ணினேன். இருந்தாலும் யாருன்னு என் நண்பரிடம் கேட்டேன். பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் மேஜர் முகுந்த் வரதராஜனா? என நானே திரும்ப கேட்டேன். அவர் சரியாக சொல்லிட்டிங்க என பதிலளித்தார்.  நான் டிவியில் மேஜர் முகுந்த் மரணம் பற்றியும், வாழ்க்கை வரலாறு பற்றியும் பார்த்தேன்.

மேலும் மேஜர் முகுந்தின் இறுதிச்சடங்கில் அவரின் மகள் செய்த விஷயம் யாராலும் மறக்க முடியாது. நான் அந்த புத்தகத்தை படித்தேன். சோனி நிறுவனம் இதில் ஒரு சாப்டரை படமாக்க இருப்பதாக சொன்னார்கள்.

ஆனால் நான் ஏற்கனவே கமிட்டான படம் பற்றி என் நண்பரிடம் சொன்னேன். மேலும் புத்தகம் மட்டும் வைத்து படம் பண்ண முடியாது என்பதால் தகவல்கள் வேண்டும் என நினைத்தேன். பின்னர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனிடம் பேசினேன். அதன் பிறகு சிலரிடம் பேசி காஷ்மீரில் அவரின் 2 ஆபரேஷன்கள் பற்றி கேட்டறிந்தேன். முகுந்த் குடும்பத்தினரிடம் பேசிய போது வேறு வித தகவல்கள் கிடைத்தது. ஆனால் இவை எதுவும் திரைக்கதையாக வரவில்லை. இதை அனைத்தையும் பேப்பரில் எழுதி வைத்தேன்.

பின்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து திருவனந்தபுரம் வந்த மேஜர் முகுந்தின் மனைவியை சந்தித்தேன். அந்த சந்திப்பு 6,7 மணி நேரம் சென்றது. அப்போது தான் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒரு ஆன்மா உள்ளது தெரிந்தது. இது தான்  அமரன் படத்தின் கதை உருவாக காரணம் அமைந்தது” என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.