காரி – விமர்சனம்!

கார்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சர்தார்’ படத்தினை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ், S.லக்ஷ்மண் குமார் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் காரி. சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் மலையாள  நடிகை பார்வதி அருண், இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜேடி. சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நாகி நீடு, பிரேம் குமார், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, அம்மு அபிராமி, ராம்குமார் கணேசன், தேனி முருகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அறிமுக  இயக்குனர்  ஹேமந்த்  ‘காரி’படத்தினை இயக்கியுள்ளார்.

ராமநாதபுரம், கருவேலங் காட்டுக்கு நடுவே உள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தில் உள்ள கோயிலை நிர்வகிப்பது தொடர்பாக இரு பிரிவினருக்குள்ளே மோதல் ஏற்படுகிறது. அந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர இரு பிரிவினரும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவெடுக்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் கோயில் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளலாம்.  இதனால் நாகிநீடு, சிறந்த மாடுபிடி வீரரான ஆடுகளம் நரேனை அழைத்து செல்வதற்காக அவரைத் தேடி சென்னை வருகிறார். ஆனால் ஆடுகளம் நரேனின் மகனான சசிகுமார் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது? என்பது தான் ‘காரி’ படத்தின் கதை.

ஜல்லிக்கட்டு காளைகளில் தனித் தன்மையுடன் விளங்கும், ஒரு வகை காளை தான் ‘காரி’. சுத்தக் கருப்பு நிறமாக இருக்கும். மிக ரோஷமான காளை. பொதுவா சொன்னா, ஜல்லிக்கட்டு காளைகளில் இது ஒரு சூப்பர் ஸ்டார். ஒவ்வொரு மாடு பிடி வீரரும் இதை அணைவதையே மிகப் பெருமையாக கருதுவர். இந்த ஜல்லிக்கட்டு காளையினை சுற்றி பல உண்மைகளையும், சில சினிமாத் தனங்களையும் சேர்த்து விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார். இயக்குனர் ஹேமந்த். அதோடு ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்களை  எடுத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கதுடன், பாராட்டுக்குரியது.

சசிகுமாருக்கு இதுவும் ஒரு சிறந்த படம். நன்றாக நடித்திருக்கிறார். அவருடன் சேர்த்து படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் பாலாஜி சக்திவேல் அவரது மகளாக நடித்த பார்வதி அருண் இருவரும் தனிக்கவனம் பெறுகிறார்கள். மாட்டை விற்ற பிறகு பார்வதி அருண், கீழே விழுந்து புரண்டு அழும் காட்சி, அவர் நடிப்பின் சிறப்பான காட்சிக்கு ஒரு சாட்சி!

தவறில்லாத ராமநாதபுரத்தின் வட்டார பாஷை, காட்சிகளுக்கு ஏற்ற வசனம், படத்தின் பெரும் பலம். உயிர்ப்பான வசனம் எழுதியவருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

பாடல்களை விட, பின்னணி இசை பரவாயில்லை! சில இடங்களில் காட்சிகளுக்கேற்றபடி பின்னணி இசை இருக்கிறது. சில இடங்களில் அது பொருந்தவில்லை.

ஒளிப்பதிவு மிகச்சிறப்பு. ஆடுகளம் நரேனின் ஒப்பனை கேலிக்குரியது! கவனம் எடுத்து அவரது ஒப்பனையை சரி செய்திருக்கலாம்.

வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சிறுமியின் பாலியல் துன்புறுத்தல் காட்சி, உள்ளிட்ட சில காட்சிகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், ‘காரி’ காளையைப் போன்றே தரமானதாக இருக்கிறது.

சமுதாய பொறுப்பு மிக்க மண்ணின் மனம் கமழும், இந்தப்படத்தினை தயாரித்த லக்‌ஷ்மண் குமாரும், இயக்குனர் ஹேமந்தும் பாராட்டுக்குரியவர்கள்.

Leave A Reply

Your email address will not be published.