‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – ஒடிடி(OTT) யில் பார்க்க காத்திராமல்,உடனே பார்க்க வேண்டிய படம்!
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – விமர்சனம்!
சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரித்துள்ள திரைப்படம், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், இயக்கியுள்ள இப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்டுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், கனிகா, ரித்விகா மற்றும் இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ஒரு சில திரைப்படங்களின் தலைப்பு மட்டுமே அதன் கதைக்கு பொருத்தமானதாக இருக்கும். அந்த வகையில், சங்க கால புலவர் கணியன் பூங்குன்றனின் பாடல் வரியான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, என்ற தலைப்பு, அதன் கதைக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.
அர்த்தம் பொதிந்து அழகாக பெயரிட்டிருக்கும், இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தை பாராட்டிவிட்டு விமர்சனத்திற்குள் செல்லலாம்.
இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நடவடிக்கையின் போது பெற்றோர்களை இழக்கும் சிறுவன்(விஜய் சேதுபதி) புனிதனை, கிருஸ்துவ பாதிரியார் ஒருவர் லண்டன் அனுப்பி வைக்கிறார். ஆனால் போகும் வழியில் இலங்கை ராணுவத்தால் போராளி என குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறான். அங்கிருந்த ஒரு அதிகாரியின் உதவியுடன் தப்பித்து ஆஸ்திரேலியா செல்பவர்களுடன் படகில் செல்கிறான். படகு வழியில் கவிழ்ந்து அரை, குறை உயிருடன் கேரளாவில் கரை ஒதுங்கும் அவனை ஒருவர் காப்பாற்றுகிறார். அவருடைய பராமரிப்பில் வளர்ந்து இளைஞனாகும் புனிதன் (விஜய் சேதுபதி) பழனி கோயிலுக்கு சாமி கும்பிட செல்கிறார். அப்போது நடக்கும் ஒரு தகராறில் போலீஸ் அதிகாரி (மகிழ் திருமேனி) சட்ட விரோத குடியேற்றம் என சொல்லி அவரை கைது செய்கிறார். அதிலிருந்து புனிதனை அகதி முகாமிலிருக்கும் ஆறுமுகம் (கரு.பழனியப்பன்) காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். இதனால் போலீஸ் அதிகாரி (மகிழ்திருமேனி) புனிதனை (விஜய் சேதுபதி) கொல்லத்துடிக்கிறார். ஏன், எதற்கு? என்பது தான் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் கதை.
சில லாஜிக்குகள் இருந்தபோதிலும், இலங்கை அகதிகளின் நிலையை அழகாக படம் பிடித்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் உண்மையின் சாட்சியாகவே இருக்கிறது.
நேர்த்தியான திரைக்கதை, காட்சியமைப்பு, வசனங்கள் இவைகளை மேம்படுத்தி ரசிகர்களை திரையை விட்டு அகலவிடாத இசையமைப்பு என அனைத்தும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்சேதுபதி பேசும் வலிமையான வசனம் மூலம் அகதிகளின் வலியை கண்முன் நிறுத்துகிறது!
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவும், நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் படத்தின் பலம்.
படத்தில் நடித்த விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், கனிகா, ரித்விகா, இயக்குநர்கள் கரு.பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி, விவேக், சின்னி ஜெயந்த், இமான் அண்ணாச்சி, பவா செல்லத்துரை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கேற்றபடி சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி சில இடங்களில் ‘96’ திரைப்படத்தின் தோற்றத்தில் வருகிறார். மற்றபடி ஒகே.
மொத்தத்தில், அகதிகளாக வாழும் மக்களின் வலிமிகுந்த வாழ்க்கையினை எல்லோரும் உணரும்படியும், எதார்த்தமாகவும், ரசிக்கும்படி படமாக்கிய இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த், பாராட்டப்பட வேண்டியவர்.
மொத்தத்தில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஒடிடி(OTT) யில் பார்க்க காத்திராமல், உடனே பார்க்க வேண்டிய படம்!
ரேட்டிங் 3/5