அதர்வாவுடன் இணையும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார்!

ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகறது என்று சொல்வார்கள். உண்மை, அதை தனது எட்டு தோட்டாக்கள் படத்தின் மூலமே நிரூபித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் குருதி ஆட்டம் படத்திலும் திறமையான நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார். அப்படி தாங்கள் நடிக்கும் எல்லா படங்ளிலுமே அழுத்தமான முத்திரையை பதிக்கும் ராதாரவி மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் இந்த குருதி ஆட்டம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ராதாரவி, ராதிகா என் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, நிச்சயமாக அவர்கள் இதில் நடிப்பது படத்திற்கு மிகப்பெரிய கவன ஈர்ப்பாக அமையும். இந்த கதையை எழுதியதில் இருந்தே இவர்களை தவிர வேறு யாரையும் என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. முதலில் இவர்கள் என் கதையை கேட்பார்களா என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது, ஆனால் நான் கதாபாத்திரத்தை எழுதியிருந்த விதம் அவர்களை கவர்ந்தது என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமான விஷயம். முழுமனதோடு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். இந்த படத்தின் நாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது, நாயகி அறிவிப்பு நிச்சயம் எல்லோரது கவனத்தையும் பெறும்” என்றார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

மதுரைப் பின்னணியில் உள்ள கேங்க்ஸ்டர்களை பற்றிய ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.