‘அரசியல் நாகரிகத்திற்கு உதாரணமாக வாழ்ந்தவர் பிதாமகன் வாஜ்பாய்’ – பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மும்முறை பிரதமர் பதவியை அலங்கரித்தவருமான வாஜ்பாய் முதுமை காரணமாக தில்லியில் காலமான செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்திய அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களாலும் மதிக்கப்பட்ட தலைவர் வாஜ்பாய் ஆவார். இந்தியாவில் அதிக காலம் பிரதமராக இருந்த காங்கிரஸ் அல்லாத தலைவர் வாஜ்பாய் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இளம் வயதிலிருந்தே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த வாஜ்பாய் பாரதிய ஜனசங்கம், பாரதிய ஜனதா ஆகிய இரு கட்சிகளின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். பின்னாளில் வாஜ்பாயின் பிறந்த நாளை நல்லாட்சி நாள் என்று கொண்டாடும் அளவுக்கு சிறப்பான நல்லாட்சியை வழங்கினார்.

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி சுமார் 6 ஆண்டுகள் இடம் பெற்றிருந்தது. அந்தக் காலத்தில் தமிழகத்திற்கு தேவையான தொடர்வண்டித் திட்டங்கள், சுகாதாரத்திட்டங்கள், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்களை பணி நிலைப்பு செய்தல் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களுக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் என்ற முறையில் வாஜ்பாய் முழு ஆதரவைக் கொடுத்தார். பா.ம.க அமைச்சர்கள் திட்டங்களை செயல்படுத்தும் விதத்தை பாராட்டிய அவர், அவரது தொகுதியிலுள்ள தொடர்வண்டி நிலையத்தை அழகுபடுத்தித் தரும் பணியை பா.ம.க. அமைச்சர்களிடம் சிறப்பு பொறுப்பாக ஒப்படைத்தார். மொத்தத்தில் மிகச்சிறந்த நிர்வாகியாக திகழ்ந்தார்.

என் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், மரியாதையும் காட்டினார். நானும் அவர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தேன். நாடாளுமன்றத்திற்குள் காலடி வைப்பதில்லை என்ற எனது சபதத்தை அறிந்த அவர் ஒருமுறை தமது கடுமையான பணிச்சுமைக்கு நடுவே நாடாளுமன்றத்திலிருந்து அவரது இல்லத்திற்கு வந்து சந்தித்தார். ‘‘ நீங்கள் ஒரு சமூகநீதித் தலைவர். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி’’ என்று அடிக்கடி கூறுவார். தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் தேசிய மொழிகளாக அறிவிக்கக் கோரி பா.ம.க. நடத்திய கருத்தரங்கத்திற்காக 18 மொழிகளில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழைப் பார்த்து பாராட்டிய அவர், அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தம்மால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அது சாத்தியமாகவில்லை.

அரசியல் நாகரிகத்தைப் போற்றி பாதுகாத்த பிதாமகனான வாஜ்பாயின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.