அ.தி.மு.க ஆட்சியின் அவலட்சணமும் உடைந்த முக்கொம்பு மதகுகள் போல் தான் இருக்கிறது! – மு.க.ஸ்டாலின்

“உடைந்த முக்கொம்பு அணையின் மதகுப் பணிகள் ஒரே வாரத்தில் சீரமைக்கப்படும்” என்று கடந்த 24ஆம் தேதி அறிவித்த முதலமைச்சரை, வாக்குறுதி அளித்தபடி நடைபெறாததால், காவிரி டெல்டா விவசாயிகள் அதுகுறித்து நேரடியாக கேட்டுத் தெரிந்துகொள்ள தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, இன்று திருச்சியில் உடைந்த முக்கொம்பு அணையை பார்வையிட்ட பிறகு தெரிந்து கொண்டேன்.

அ.தி.மு.க ஆட்சியின் அவலட்சணமும் உடைந்த முக்கொம்பு மதகுகள் போல் தான் இருக்கிறது! இராணுவத்தையோ அல்லது தேசியப் பேரிடர் மீட்புப் படையையோ அழைத்து, முக்கொம்பு அணை சேதத்தை உடனடியாக சரி செய்யாமல், எவ்விதப் பாதுகாப்பும் இன்றி உள்ளூரில் உள்ள பணியாளர்களை வைத்து, சீரமைப்புப் பணிகளில் அலட்சியம் காட்டுவதால், இன்றுவரை 40 சதவீதப் பணிகள் கூட நிறைவு பெறவில்லை.

“அணையின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்யத் தவறியதும்”, “எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அளவுக்கு அதிகமாகத் தண்ணீரை திறந்து விட்டதும் தான்” என்பவையே இந்த சேதாரத்திற்கு முக்கியக் காரணங்கள். “முக்கொம்புப் பேரிடர்” முழுக்க முழுக்க அ.தி.மு.க ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த அகோரக் காட்சி. முக்கொம்பு அணைப் பகுதியில் 20 அடி ஆழத்திற்கு மணல் கொள்ளை நடைபெறுகிறது என்றும், முக்கொம்பு அணைக்கு ஆபத்து ஏற்படும் எனவும் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் கூட, அணையின் பாதுகாப்பில் அ.தி.மு.க அரசு தேவையான அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவேதான், முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்து, விவசாயத்திற்குப் பயன்பட வேண்டிய அரிதான காவிரி நீர் கடலில் கலந்து அப்படியே வீணாகி விட்டது. விவசாயிகள் வேதனையுடன் எப்போது தண்ணீர் வரும் என்று விழிநீர் பெருகிக் காத்திருக்கிறார்கள்.

முக்கொம்பைப் பார்வையிட்ட முதலமைச்சர், “காய்ச்சல் சொல்லிக் கொண்டா வருகிறது” என்று விவசாயிகளை ஏளனம் செய்து “ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனின் வாரிசு” போல் கேலியாகப் பேட்டி கொடுத்தார். அதே நேரத்தில் “காய்ச்சல்” சொல்லிக் கொண்டு வருவதில்லை; ஆனால் டெண்டரில் “கமிஷன்” நிர்ணயம் செய்து சொல்லி வைத்தாற்போல வந்து கொட்டுகிறது என்பதால்தான், இந்த முக்கொம்பு அணை உடைப்பு மட்டுமல்ல – கடை மடைப் பகுதிக்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டு, 47 நாட்களாகியும் இன்றுவரை காவிரி நீர் வேளாண்மைப் பணிகளுக்கு போய்ச்சேரவில்லை!

நான் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதைப்போல், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான அணை பாதுகாப்பு, தூர்வாருதல் மற்றும் குடிமராமத்துப் பணிகளில் “கமிஷனை” வழித்துத் தூர்வாரினார்களே தவிர, காவிரி “கால்வாய்களை”த் தூர் வாரவில்லை என்ற நிலைமை, “கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை” என்பது போல் தெரிகிறது.

முக்கொம்பிற்குப் பிறகு திருவையாறு தொகுதிக்குட்பட்ட பூதலூர் ஒன்றியத்தில் கட்டளைக் கால்வாய் மற்றும் உய்யக்கொண்டான் கால்வாய் கடை மடைப் பகுதிகளைப் பார்வையிட்டேன்.

கட்டளைக் கால்வாய் மூலம் 63 ஏரிகளுக்கும், உய்யக்கொண்டான் கால்வாய் மூலம் 18 ஏரிகளுக்கும் – இந்த கடம்பா ஏரி உள்ளிட்ட 81 ஏரிகளுக்குத் தண்ணீர் வரவில்லை

என்பதை நேரில் கண்ட போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. செழிப்பாக காட்சி தர வேண்டிய “நெற்களஞ்சியம்” வறண்டு கிடப்பதைப் பார்த்து நெஞ்சம் விம்மியது. “நூறு நாள் வேலையில் ஊழல் போல் இந்த தூர்வாரும் பணியிலும் ஊழல்” என்று விவசாயிகளின் குமுறலைக் கேட்டேன்.

இதுதவிர கடைமடைப் பகுதியில் 17 லட்சம் ஏக்கர் நீரின்றி வறண்டு கிடக்கிறது என்று விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் முன்பே ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட நான்கு ஒன்றியங்கள் கல்லணைக் கால்வாய்ப் பாசன கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்று அங்கும் விவசாயிகள் போராடுகிறார்கள்.

தினமும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டும், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லவில்லை என்றால், அ.தி.மு.க அரசு நீர் மேலாண்மையில் எப்போதும் எவராலும் மன்னிக்க முடியாத படு தோல்வியைச் சந்தித்துள்ளது. “காவிரி நீர் கடைமடைக்குச் செல்ல 75 நாட்கள் ஆகும்” என்று, பொதுப்பணித்துறைப் பொறியாளர்கள் மூலமாக அறிக்கை வெளியிட வைத்தார் முதலமைச்சர்.

ஆனால், என்னிடம் விவசாயிகள் “கால்வாய்களை காலத்தே தூர் வாரியிருந்தால் 7 நாட்களில் கடைமடைக்கு தண்ணீர் சென்றிருக்கும். – பரந்து விரிந்த பசுமைக் காட்சி எங்கும் கண்களுக்கு தெரிந்திருக்கும்” என்கிறார்கள்!

ஆகவே, இதுவரை ஏரி குளங்களை தூர் வாரும் குடிமராமத்து பணிகளுக்கு மட்டும் 2016 முதல் 2019 வரையுள்ள நிதி நிலை அறிக்கைகளில், 700 கோடி ரூபாய் ஒதுக்கி செலவு செய்ததும், 3 ஆயிரத்து 854 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளதாக சட்டமன்றத்திலேயே அறிவித்ததும், “கமிஷனுக்கு செய்த பணிகளாக” மாறிய வெட்கக்கேடான காரியங்களாக காவிரி டெல்டாவில் அரங்கேறியிருக்கின்றன.

விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிதும் மனசாட்சியின்றி ஊழல் செய்து, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு கோடி கோடியாக கப்பம் கட்டிக் களிப்பூட்டும் ஆட்சி அ.தி.மு.க ஆட்சி என்பது, காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட்ட பிறகு வெளிப்படையாகவே தெரிகிறது.

திருச்சி முக்கொம்பாக இருந்தாலும் சரி, காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க அரசின் நிர்வாகம் “கோமாவில்” படுத்த படுக்கையாய்க் கிடக்கிறது. ஆகவே, கடைமடை பகுதிவரை பாசனத்திற்கான தண்ணீர் சென்று சேர, அ.தி.மு.க அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கேற்ப தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தி.மு.கழகத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகள் – பொதுமக்கள் பங்கேற்புடன், ஆட்சியாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கும் மிகப்பெரிய போராட்டமாக அமையும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!