ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற அயனாவரம் சரக உதவி ஆணையர் பாலமுருகன்

பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற காவல் உதவி ஆணையர்

சென்னை¸ நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் மற்றும் பரிமளா தம்பதியின் ஒரே மகன் கார்த்திக். இவர் மயிலாப்பூரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

தந்தை கோவிந்தராஜ் இறந்த நிலையில் தாயின் அரவணைப்பில் கார்த்திக் இருந்து வந்தார். இந்நிலையில் 31.08.2018ம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக பரிமளாவை பக்கத்துவீட்டு இளைஞர் சூர்யா என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்தார். இதனால் தாயை இழந்த கார்த்திக் வேறு உறவினர் இல்லாததால் ஆதரவற்று போனார்.

சிறுவனின் நிலையறிந்த அயனாவரம் சரக உதவி ஆணையர் திரு.பாலமுருகன் அவர்கள் தற்போது சிறுவன் கார்த்திக்கை அரவணைத்துள்ளார். கார்த்திக்கின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கார்த்திக் தங்கியுள்ள விடுதிக்கு சென்ற உதவி ஆணையர் அங்குள்ள நிர்வாகியிடம் கார்த்திக்கின் முழு பாதுகாவலன் இனி நான்தான் என்றும்¸ அந்த சிறுவனுக்கு என்ன செய்ய வேண்டுமானால் நானே செய்வேன் எனவும் எழுதிக்கொடுத்துவிட்டு செல்போன் எண்ணையும் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கார்த்திக்கை வீட்டிற்கு அழைத்து வந்து உணவளித்து அவனுக்கு புத்தாடைகளை அளித்தார்.

மேலும் சிறுவனுக்கு உறவினர்கள் யாரும் உள்ளாரா என்பதை ஆய்வு செய்தபின் எதிர்காலத்தில் சட்டப்படி அவனை மகனாக தத்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார். காவல் உதவி ஆணையாளர் திரு.பாலமுருகனையும் அவரது குடும்பத்திரையும் பலர் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.