ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன்! – கமல்ஹாசன்

நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் ஆறுதல்..!! மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாகிகள் நேரில் அஞ்சலி..!!

அநீதியான நீட் தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால்  உயிரை மாய்த்துக்கொண்ட  மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்கள் 12.9.2021 அன்று தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

“… இது இறுதி மரணமாக இருக்கட்டும். எந்த ஒரு தாய்க்கும் இந்த சோகம் வரக்கூடாது. எல்லோரும் சேர்ந்து இந்தத் தேர்வுக்கு ஒரு  முடிவுகட்டுங்கள்” என்று தனுஷின் தாய் கதறியழுதபோது  “…ஈடுசெய்ய முடியாத இழப்பிது. இழந்த நம் பிள்ளைக்கான ஒப்பாரியில் நானும் பங்கெடுக்கிறேன். நீட் தேர்வுக்கு  எதிராக இன்னும் வலுவாகப் போராடி அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைக் காப்போம்” . என்று ஆறுதல் தெரிவித்தார்.

மாணவர் தனுஷ் அவர்களின் உடலுக்கு  மாநில செயலாளர்  சரத்பாபு ஏழுமலை அவர்களும், மாவட்டச் செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்களும் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் செல்வி அனுசுயா, திருமதி. அனிதா சசிகுமார், நகர செயலாளர் திரு. கண்ணன், சதீஸ்,ஜெகன், குமரேசன், முரளி, முருகன், ஈஸ்வரன், லக்‌ஷயா மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தனர்.