கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலம் முழுவதும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கித் தத்தளித்து வருகிறது.
கடும் மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். பல லட்சம் பேர் தங்களது உடமைகளை இழந்து பரிதவித்து வருகின்றனர். இவர்கள் 2 ஆயிரத்து 94 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 100 வருடங்களில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாக பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து கேரளாவை மீட்க, மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளன. வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்த பிரதமர் மோடி 500 கோடி நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார்.
கேரளாவில் வெள்ளத்தால் சுமார் 10ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் உருக்குலைந்தும் ஆயிரக்கணக்கான வீடுகள் அடியோடு சரிந்தும் உள்ளது. மின்சாரம், தகவல் தொடர்பு, தரை மற்றும் வான் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளது. கேரளாவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், மாநில அரசுகளின் பல்வேறு குழுக்கள், மீனவர்கள், தன்னார்வலர்கள், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோரை மீட்டுள்ளனர். மீட்புப் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. கடற்படையை சேர்ந்த 42 அணிகள், ராணுவத்தை சேர்ந்த 16 அணிகள் குழுக்களாக பிரிந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ரணுவ ஹெலிகாப்டர்கள், 320 படகுகளும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்திய வானிலை மய்யம் கேரளாவின் 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது.